ஒன் பாட் உணவு வகைகள் என்றாலே பலருக்கும் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. இவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் பிரியாணி, சாம்பார் சாதம், வெஜிடபிள் பிரியாணி, தேங்காய் சாதம், புலாவ் இவை போன்றவை தான். ஆனால் முதன் முதலில் குக்கரில் இந்த உணவுகளை போலவே ரசம் சாதத்தையும் சுலபமாக செய்ய முடியும். எப்பொழுதும் அனைவரது வீட்டிலும் ரசம் தனியாக வைத்து, சாதம் தனியாக வடித்து இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம். ஆனால் இங்கு கூறப்பட்டுள்ளபடி மிகவும் ஈஸியாக சட்டென பத்தே நிமிடத்தில் குக்கரில் ரசம் சாதத்தை செய்துவிட முடியும். அதிலும் இதன் சுவை அனைவராலும் மறக்க முடியாத அளவிற்கு அவ்வளவு சூப்பராக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
அரிசி – 150 கிராம், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், தனியா – ஒரு ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பூண்டு – 20 பல், தக்காளி – 2, புளி – நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – அரை ஸ்பூன், வர மிளகாய் – 3, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மிளகு தூள் – அரை ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் குக்கரில் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் நன்றாக சூடானதும், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், நான்கு பல் பூண்டு மற்றும் 3 காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மீண்டும் அதே குக்கரை அடுப்பின் மீது வைத்து 300 கிராம் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் இரண்டு தக்காளிப் பழங்களைப் பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் 10 பல் பூண்டு சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். பிறகு 150 கிராம் அரிசி யை இதனுடன் சேர்த்து, நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து அந்த புளித் தண்ணீரையும் இவற்றுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இந்த தாளிப்பை செய்து வைத்துள்ள சாதத்தில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக ஒரு கொத்து கொத்தமல்லி தழைகளைத் தூவி, நன்றாக கலந்துவிட்டு அனைவருக்கும் சாப்பிட பரிமாறி கொடுக்க வேண்டும்.