இனி பூரிக்கு மசாலா செய்யும் போது உருளைக்கிழங்குக்கு பதிலாக இதை சேர்த்து மசாலா செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். உருளைக்கிழங்கு சாப்பிட்டா பிரச்சினை வரும்னு பயமே இல்லாம இனி பூரி மசாலா சாப்பிடலாம்.

Poori Masala
- Advertisement -

இந்த பூரி மசாலாவை பலருக்கும் பிடித்திருந்தாலும், சிலருக்கு உருளைக்கிழங்கு பிடிக்காது. ஒருவேளை பிடிக்கும் என்றாலும் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வு தொந்தரவு வரும் என நினைத்து சாப்பிடாமல் இருப்பார்கள். இந்த முறையில் மசாலா செய்தால் இனி உருளைக்கிழங்கு பற்றிய பயமே இல்லாமல் பூரி மசாலா சாப்பிடலாம். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் அந்த உருளைக்கிழங்கு மசாலாவை உருளைக் கிழங்கு சேர்க்காமல் எப்படி அதே சுவையில் செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த பூரி மசாலா செய்வதற்கு முதலில் நான்கு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல நான்கு பச்சை மிளகாய் அரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய பழுத்த தக்காளியை சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது பூரி மசாலாவை தாளித்து விடலாம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். கடுகு பொரிந்த உடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு இவை இரண்டையும் சேர்த்து லேசாக சிவந்து வந்த பிறகு அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவை எல்லாம் பொரிந்த உடன் அரிந்து வைத்த வெங்காயத்தை சேர்த்த பிறகு பச்சை மிளகாய், ஒரு சின்ன துண்டு இஞ்சி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் நான்கு பல் பூண்டை சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அரிந்து வைத்த தக்காளி சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை கொஞ்சம் புதினா இலைகள் இவை எல்லாம் சேர்த்து பாதி அளவு வதங்கிய பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு இதை கொதிக்க விடுங்கள்.

இப்போது ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களிடம் பொட்டுக்கடலை மாவு இல்லை என்றால் கடலை மாவையும் சேர்த்துக் கொள்ளலாம். இதை விட கடலை மாவை லேசாக வறுத்து பொடி செய்து சேர்த்தால் இன்னும் சுவை பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -

இந்த பொட்டுக்கடலை மாவை கலந்த பிறகு கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் இந்த மசாலாவை ஊற்றி நன்றாக ஒரு முறை கலந்து கொள்ளுங்கள். இந்த நேரத்தில் மசாலாவில் சேர்த்து இருக்கும் உப்பு காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ப்யூர் வெஜிடபிள் கேரட் 65 ரொம்ப ருசியாக வீட்டில் எளிதாக எப்படி செய்வது?

இதை கலந்த பிறகு ஒரு 2 நிமிடம் நன்றாக கொதித்தாலே போதும் பூரிக்கான அந்த மசாலா தயாராகி விடும். சுட சுட பூரியுடன் இந்த மசாலாவையும் நல்ல சூட்டுடன் இருக்கும் போது வைத்து சாப்பிட்டு பாருங்கள். உருளைக்கிழங்கு மசாலாவை சாப்பிட்டால் என்ன சுவையில் இருக்குமோ அதை விட ஒருபடி மேலே சுவையாக இருக்கும்.

- Advertisement -