ஹனுமன் கோவில் ‘ஓட்டை வடை’ ரேஷன் பச்சரிசியில் வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

thattai-hanumar

ஹனுமன் கோவிலில் மிக விசேஷமாக கொடுக்கப்படும் பிரசாத வகைகளில் ஒன்று தான் ‘ஓட்டை வடை’. இதை ‘தட்டை’ என்றும் கூறுவார்கள். இதை சாப்பிடும் பொழுது நாவின் சுவை அரும்புகள் அனைத்தும் நர்த்தனம் ஆடும். மற்ற எல்லா வகை நொறுக்கு தீனிகளையும் விட தட்டை மிகவும் வித்தியாசமான சுவையுடன் அட்டகாசமாக இருக்கும். அதை வாங்கி சாப்பிடுவதற்காகவே அனுமார் கோவிலுக்கு செல்பவர்கள் ஏராளம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அதை சுலபமாக வீட்டிலேயே நாம் எப்படி செய்து வைப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

thattai1

தட்டை செய்வதற்கு அதிக பொருட்கள் தேவை இல்லை. இதில் அதிகப்படியான பூண்டு சேர்க்க இருப்பதால் உடலுக்கு கெடுதல் இல்லை. இதை செய்வதற்கு அதிக நேரமும் உங்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. ஒரு முறை செய்து வைத்து விட்டால் ஒரு மாதம் வரை உங்களுக்கு எதையாவது சாப்பிட வேண்டும் போல் வரும் எண்ணம் வரவே வராது. வீட்டிலிருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் தாய்மார்களிடம் நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். ஏதாவது சாப்பிட இருக்கா? என்று கேட்பவர்களுக்கு உடனே நான்கு தட்டை வடையை கொடுத்து வாயை அமுக்கி விடலாம்.

ஓட்டை/தட்டை வடை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – ஒரு கிலோ, கடலை பருப்பு – 100g, பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 15, பூண்டு – 150g, கருவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

thattai

ஓட்டை வடை செய்முறை விளக்கம்:
நீங்கள் வீட்டில் பச்சரிசி மாவு வைத்திருந்தால் இதை மிகவும் சுலபமாக செய்து விடலாம். இல்லாதவர்கள் பச்சரிசி மாவை இப்படி அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிலோ ரேஷன் பச்சரிசியை கற்கள் மற்றும் தவிடுகள் நீக்கி மூன்றிலிருந்து நான்கு முறை நன்கு கழுவி மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த அரிசியை பின்னர் வெயிலில் அரை மணி நேரம் காய விடுங்கள்.

- Advertisement -

காய்ந்ததும் அந்த அரிசியை மிக்ஸியில் அல்லது அரவையில் நன்கு அரைத்து சல்லடையில் சலித்து வைத்து கொள்ளுங்கள். இப்போது உங்களுக்குத் தட்டைக்கு தேவையான பச்சரிசி மாவு கிடைத்து விட்டது. பின்னர் மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் மற்றும் 100g அளவிற்கு பூண்டை தோலுடன் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

rice-flour

பின்னர் அந்த மாவை வெறும் வாணலியில் லேசாக சூடேற்றி இறக்கி வைத்து விடுங்கள். மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, அரைத்து வைத்த மிளகாய் பேஸ்ட், நன்கு இடித்து எடுத்த தோலுடன் கூடிய பூண்டு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நான்கு கலந்து வையுங்கள். தண்ணீரில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள் அந்த தண்ணீரை தெளித்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளுங்கள்.

இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு பாலிதீன் கவரில் எண்ணெய் தடவி அதில் உருண்டைகளை கைகளால் அல்லது ஏதேனும் ஒரு டம்ளர் கொண்டு தட்டை போல் அழுத்தி விடுங்கள். ஓரங்களையும் சற்று அழுத்தி எடுக்க வேண்டும். ஓரங்களை அதிகமாக அழுத்தி விட்டால் சரியாக வராது லேசாக அழுத்தினால் போதுமானது.

thattai2

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் தேவையான அளவிற்கு ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு தட்டைகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். எண்ணெயில் போடும் முன் மேகி ஸ்பூன் வைத்து தட்டையில் நீங்கள் சிறுசிறு ஓட்டைகள் போட்டால் உங்களுக்கு உப்பி வராமல் தட்டையாக அழகாக வரும்.

thattai3

இதில் சேர்க்கப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களும் உடலுக்கு நன்மை தருபவை. எனவே தாராளமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம். இதில் மிளகாய்க்கு பதிலாக மிளகாய்த்தூள் சில பேர் சேர்ப்பார்கள். அப்படி சேர்த்தால் தட்டை ருசியாக இருக்காது. மேலே கூறிய படி மிளகாய், பூண்டு பெருங்காயத்தூள் இவற்றை எல்லாம் சேர்த்து ஓட்டை வடை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். நாம் அனுமார் கோயிலில் சாப்பிடும் ஓட்டை வடை போலவே அட்டகாசமாக இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் ஒரு முறை செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாரை அசத்தி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
சூப்பரான கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை அரவை புளி குழம்பு எப்படி செய்வது?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.