பாலக் பன்னீர் பரோட்டா செய்யும் முறை

palak paneer paratha
- Advertisement -

இன்றைய காலத்தில் துரித உணவுகளை விரும்பி சாப்பிடக்கூடியவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மைதா மாவினால் செய்யப்பட்ட பொருட்களை விரும்பி சாப்பிடுபவர்கள் இன்னும் அதிகம். அதிலும் குறிப்பாக பரோட்டா பிரியர்கள் என்று தனி கூட்டமே இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்காக வீட்டிலேயே மிகவும் சத்தான பாலக் பன்னீர் புரோட்டா செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

வீட்டில் செய்யக்கூடிய பரோட்டாவில் மைதா மாவிற்கு பதிலாக கோதுமை மாவை சேர்த்து செய்வோம். அதுமட்டுமல்லாமல் அதில் நம் உடம்பிற்கு தேவையான சத்துமிகுந்த கீரையும் சேர்த்து செய்வதன் மூலம் மிகவும் ஆரோக்கியமான பரோட்டா நமக்கு கிடைக்கும். இதில் நாம் பன்னீரையும் சேர்ப்பதால் மிகவும் ருசியாக இருக்கும். ருசியும் ஆரோக்கியமும் நிறைந்த இந்த பரோட்டாவை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பசலை கீரை – ஒரு கைப்பிடி அளவு
  • பூண்டு – 3 பல்
  • பச்சை மிளகாய் – 5
  • உப்பு – தேவையான அளவு
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – ஒரு டீஸ்பூன்
  • இஞ்சி – ஒரு இன்ச்
  • வெங்காயம் – 1
  • மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
  • துருவிய பன்னீர் – ஒரு கப்
  • கோதுமை மாவு – 2 கப்

செய்முறை

முதலில் கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து தண்ணீர் கொதித்ததும் கீரையை அதில் சேர்த்து இரண்டு நிமிடம் வேகவைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை ஆறிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் பூண்டு, மூன்று பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, நெய் இதனுடன் அரைத்து வைத்திருக்கும் கீரை விழுதையும் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கீரை வெந்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். பிணைந்த இந்த மாவை மூடி போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது சப்பாத்திக்குள் வைப்பதற்குரிய பன்னீர் மசாலாவை தயார் செய்து கொள்வோம். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் மூன்றையும் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் துருவிய பன்னீரை சேர்த்து வதக்க வேண்டும். பன்னீரும் மசாலாவும் நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்த பிறகு அதை அப்படியே தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சப்பாத்தி மாவை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து அதற்கு நடுவில் தயார் செய்து வைத்திருக்கும் பன்னீர் மசாலாவை வைத்து சதுரமாக மடித்து மறுபடியும் திரும்ப தேய்க்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு அனைத்து மாவையும் தேய்த்த பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து அது நன்றாக காய்ந்ததும் அதில் நாம் தேய்த்து வைத்திருக்கும் பரோட்டாவை போட வேண்டும். ஒருபுறம் சிவந்த பிறகு திரும்பப் போட்டு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சுவையான அருமையான சத்து மிகுந்த பாலக் பன்னீர் பரோட்டா தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: நீர்சத்து மிக்க சுரைக்காயில் சுவையான பாயாசம் ரெசிபி இதோ உங்களுக்காக

கடைகளில் இருந்து பரோட்டா வாங்கி சாப்பிடுவதைவிட இப்படி வீட்டிலேயே சத்து மிகுந்த பரோட்டாவை செய்து சாப்பிடுவதன் மூலம் மைதா மாவின் பாதிப்பிலிருந்து வெளியில் வர முடியும்.

- Advertisement -