பலாப்பழ பணியாரம்

jack fruit paniyaram
- Advertisement -

முக்கனிகளாக திகழக் கூடியது மா, பலா, வாழை. இவை மூன்றும் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சக்திகளையும் தரக்கூடியது. இதில் மாம்பழமும், பலாப்பழமும் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கக்கூடிய பழம் என்பதால் அதற்குரிய காலத்தில் அதை உண்டு அதனால் வரக்கூடிய சத்துக்களை பெற வேண்டும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பலாப்பழத்தை வைத்து எப்படி பணியாரம் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

பழங்களை அப்படியே உண்பதால் நமக்கு பல நன்மைகள் இருந்தாலும் ஒரு சிலருக்கு இந்த பழங்களை சாப்பிட பிடிக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு அவர்கள் உண்ணும் உணவில் பழங்களை சேர்த்து கொடுப்பதன் மூலம் அந்த பழங்களுக்குரிய சத்தை அவர்களால் பெற முடியும். அப்படித்தான் பலாப்பழத்தை பணியாரமாக செய்து கொடுக்கும் முறையை பற்றி பார்க்க போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • அரைத்த பலாப்பழம் – 3/4 கப்
  • பொடியாக நறுக்கிய பலாப்பழம் – 2 டேபிள் ஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் – 100 கிராம்
  • தண்ணீர் – 1/2 கப்பு
  • கோதுமை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
  • ரவை – 1 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் – ஒரு சிட்டிகை

செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பாத்திரம் சூடானதும் அதில் நெய்யை சேர்த்து நெய் நன்றாக உருகியதும் நறுக்கி வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து வதக்க வேண்டும். தேங்காய் லேசாக சிவந்த பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் பலாப்பழத்தையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு இந்த தேங்காய் மற்றும் பலாப்பழத்தை ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அதே பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வெல்லத்தையும் சேர்த்து வெல்லம் நன்றாக கரையும் வரை அடுப்பில் வைத்து கிளற வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்த பிறகு அரைத்து வைத்திருக்கும் பலாப்பழ விழுதை அதில் சேர்த்து கிளற வேண்டும். ஐந்து நிமிடம் நன்றாக கிளறிய பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். பிறகு அதில் கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை, ஏலக்காய் மற்றும் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் பலா பழம் மற்றும் தேங்காய் இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும். இந்த மாவு தண்ணீர் பதத்தில் இருக்கக் கூடாது. கெட்டியாக தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

தண்ணீர் அதிகமானது போல் தோன்றினால் அதற்கு ஏற்றார் போல் அரிசி மாவை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது அடுப்பில் பணியார சட்டியை வைத்து பணியார குழியில் நெய்யை சிறிதளவு ஊற்றி நெய் உருகியதும் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பணியார மாவை ஊற்ற வேண்டும். ஒருபுறம் நன்றாக சிவந்த பிறகு பணியாரங்கள் அனைத்தையும் திருப்பி போட்டு மறுபுறமும் சிவக்க விட வேண்டும். இவை நன்றாக சிவந்த பிறகு அதை அனைத்தையும் எடுத்து தட்டில் வைத்து பரிமாறலாம். மிகவும் சுவையான அதே சமயம் சத்து மிகுந்த பலாப்பழ பணியாரம் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை ஸ்பெஷல் இனிப்பு அப்பம்

வித்தியாசமான முறையில் பழங்களை வைத்து செய்யக்கூடிய இந்த இனிப்பு பொருள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -