மீதமான பழைய சாதத்தை தூக்கி எறியாமல் இப்படி சுவையான பக்கோடா செய்து சாப்பிடுங்கள். பிறகு இவ்வாறு செய்வதையே வழக்கமாக வைத்துக் கொள்வீர்கள்

pakoda
- Advertisement -

பலரது வீடுகளிலும் இருக்கின்ற ஒரே பிரச்சனை பார்த்து பார்த்து அளவாக வடித்த சாதம் மீதி ஆக இருப்பதுதான். இந்த சாதத்தை சிலர் தண்ணீர் ஊற்றி மறுநாள் கஞ்சியாக குடித்துக் கொள்வார்கள். சிலர் வெருட்டி ரைஸ் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் இப்பொழுது பனிக்காலம் என்பதால் பழைய கஞ்சி குடிப்பது உடல் நலத்திற்கு பாதிப்பை உண்டாக்குகிறது. அதுபோல காலை வேளையில் விதவிதமான சாதம் செய்து கொடுத்தாலும் காலையிலேயே சாப்பாடு என்றால் பலரும் அதனை விரும்புவதில்லை. எனவே இந்த மீதமான பழைய சாதத்தை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான பக்கோடா செய்து பாருங்கள். கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் அனைத்தும் தீர்ந்துவிடும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

rice

தேவையான பொருட்கள்:
பழைய சாதம் – ஒரு கப், கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – கால் கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர், இஞ்சி சிறிய துண்டு – 1, பூண்டு – 6 பல், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி மற்றும் பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் மீதமான சாதத்தை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

onion

பிறகு இவற்றுடன் ஒரு கப் கடலை மாவு, அரை கப் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இவற்றுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இறுதியாக இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அனைத்தையும் நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் சாதத்துடன் சேர்த்து பிசையும் பொழுது ஈரப்பதம் போதுமானதாக இருக்கும். பிறகு இந்த கலவையை உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் உருட்டிக் கொள்ளலாம்.

pakoda2

பக்கோடா போன்று உருண்டை வடிவத்திலோ அல்லது ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்று நீள வடிவத்திலோ செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, உருட்டி வைத்துள்ள அனைத்து கலவைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு பொரித்த பின்னர் சுடச்சுட சாப்பிட கொடுத்து பாருங்கள். இதன் சுவையில் அனைத்துமே காலியாகிவிடும்.

- Advertisement -