இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படக்கூடியது பணம்தான். அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதில் இருக்கக்கூடிய தடைகள் விலகவும் வேலை தொடர்பான செயல்களில் வெற்றிகள் உண்டாகவும் நாம் பல விதங்களில் போராடிக் கொண்டு இருப்போம். அப்படிப்பட்ட போராட்டத்திற்கு உரிய பலனை பெறுவதற்கு நம்முடைய விடாமுயற்சியுடன் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபட வேண்டும். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று விநாயகப் பெருமானை நாம் எந்த முறையில் வழிபட்டால் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
மாசி சங்கடஹர சதுர்த்தி
மாசி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரும்பொழுது இதற்கு அதிக அளவில் பலன் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. பொதுவாக ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக ஏதாவது ஒரு வேலை செய்வோம். அந்த வேலையில் நாம் சிறந்து விளங்க வேண்டும் என்றால் நமக்கு சூரிய பகவானின் அருள் என்பது வேண்டும். சூரிய பகவானின் அருளை பெறுவதற்குரிய கிழமையாக ஞாயிற்றுக்கிழமை திகழ்கிறது. காரிய தடைகளை நீக்க கூடியவராக விநாயகப் பெருமான் இருக்கிறார். அதனால் பணவரவில் இருக்கக்கூடிய தடைகளை நீக்குவதற்கு விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி என்பது நாம் பணத்தை சம்பாதிப்பதில் இருக்கக்கூடிய தடைகளை விலக்கி பணவரவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில், காலை 7:30 மணியிலிருந்து 8:30 மணிக்குள், பகல் 11:30 இருந்து 12 30 மணிக்குள், மாலை 5:30லிருந்து 8:30 மணிக்குள் தங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் செய்யலாம். முடிந்த அளவு சங்கடஹர சதுரத்தி அன்று அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் மாலை நேரத்தில் இந்த வழிபாட்டை செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இயன்றவர்கள் மிகவும் எளிமையான முறையில் விநாயகப் பெருமானை நினைத்து விரதம் இருந்து கொள்ளலாம். அருகில் விநாயகரின் ஆலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி அபிஷேகத்தில் கலந்துகொண்டு விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு.
அன்றைய தினம் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானின் படம் அல்லது சிலைக்கு சந்தனம் குங்குமம் வைத்து சிறிதளவு கெட்டியான மஞ்சளை குழைத்து விநாயகப் பெருமானின் தொந்தியில் வைத்து அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள். பிறகு விநாயகப் பெருமானுக்கு முன்பாக 9 அகல் விளக்குகளில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த தீபம் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். பிறகு விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்து விநாயகப் பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
இவ்வாறு பாராயணம் செய்து முடித்த பிறகு 9 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட வேண்டும். இந்த தீபமானது குறைந்தது அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் எரிய வேண்டும். தீபத்தை குளிர வைத்தபிறகு பிரசாதமாக வைத்த பொருட்களை வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பகிர்ந்து உண்ணலாம். விநாயகரின் தொந்தியில் வைத்த ஒரு ரூபாய் நாணயத்தை மறுநாள் காலையில் தீபம் ஏற்றி வைத்த பிறகு எடுத்து தங்களுடைய பணம் சேமித்து வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.
மந்திரம்
ஓம் கணேசாய நமஹ
இதையும் படிக்கலாமே:நிம்மதியான வாழ்க்கையை தரும் மந்திரம்
இந்த எளிமையான ஒரு வரி மந்திரத்தை முழு மனதோடு விநாயகப் பெருமானே நினைத்து வீட்டிலோ அல்லது கோவிலிலோ முழு மனதோடு உச்சரிப்பவர்களுக்கு விநாயகப் பெருமானின் அருளால் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதோடு வேலை நிமித்தமாக நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.