ஒரு வீட்டில் எப்பொழுதும் விளக்கு எறிவது லட்சுமி கடாட்சத்தை பெருக செய்யும். விளக்கை ஏற்றும் கரங்கள் பெண்களின் கரங்களாக இருந்தால் மகாலட்சுமி அருள் பரிபூரணமாகும். எளிமையாக வீட்டிலேயே செல்வம் பெருக பெண்கள் எப்படி லட்சுமி பூஜை செய்ய வேண்டும்? லக்ஷ்மி பூஜை செய்வதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
லட்சுமி பூஜை செய்வதற்கு முதலில் மகாலட்சுமி படம் அல்லது விக்ரகம் வைத்திருந்தால் எடுத்து சுத்தம் செய்து, அலங்காரம் செய்ய வேண்டும். மகாலட்சுமிக்கு மணி விளக்கு, அகல் விளக்கு, வெள்ளி விளக்கு, கஜலட்சுமி விளக்கு போன்றவற்றால் விளக்கேற்றுவது சிறப்பான பலன்கள் தரும். விளக்கேற்ற பயன்படும் எல்லா பூஜை பொருட்களையும் பன்னீரில் போட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். எந்த அளவிற்கு வீடு வாசனையாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு உங்களுக்கு செல்வமும் பெருகும், லட்சுமி அருளும் கிடைக்கும்.
சந்தனம் வைத்து, குங்கும பொட்டு வைத்து, வாசனை மிகுந்த வெள்ளை மலர்களால் மாலை போடுங்கள். தாமரை மலர் கிடைத்தால் வாங்கி மகாலட்சுமி பாதத்தில் வையுங்கள். பின்னர் இனிக்க இனிக்க சக்கரை பொங்கல் நைவேத்தியம் படைக்க வேண்டும். கற்கண்டு வைத்தாலும் சரி தான். பானகம், பாயாசம் தயாரித்தாலும் மகாலட்சுமிக்கு ரொம்பவும் பிடிக்கும். மஹாலக்ஷ்மி முன்பாக பூரண கும்ப கலசம் ஒன்றை தயார் செய்து வைக்க வேண்டும்.
பஞ்ச பாத்திரத்தில் அல்லது செம்பு கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் பச்சை கற்பூரம் சேர்த்து இரண்டு ஏலக்காய்களை போட்டுக் கொள்ளுங்கள், ஒரு கிராம்பு சேர்த்து கலந்து வையுங்கள். பழங்கள், பேரிச்ச பழம் போன்றவற்றை ஒரு தாம்பூலத்தில் வைக்கலாம். தீபம் ஏற்றும் பொழுது நெய் ஊற்றி ஏற்ற வேண்டும். இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து தீபம் ஏற்ற வேண்டும். ஒற்றை திரி போட கூடாது. தீப ஜோதி கிழக்கு பார்த்தபடி இருக்க வேண்டும். வெற்றிலை பாக்கு வைக்க வேண்டும். வெற்றிலை பாக்கு வைக்கும் பொழுது வெற்றிலையின் நுனிப்பகுதி நம்மை பார்த்தவாறு இருக்க வேண்டும்.
பின்னர் ஒரு தாம்பூலத்தில் 108 ஒரு ரூபாய் நாணயங்களை வைத்துக் கொள்ளுங்கள். லக்ஷ்மி பூஜை செய்வதற்கு நாணயங்கள் கட்டாயம் வேண்டும். மகாலட்சுமிக்கு 108 நாமாவளிகள், 108 போற்றிகள் இருக்கின்றன. ஒவ்வொரு முறை ஒவ்வொரு நாமாவளியை உச்சரித்து நாணயங்களை அர்ச்சனை செய்ய வேண்டும். மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யும் பொழுது, நாணயங்களை தலையில் போடக் கூடாது, பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
நவராத்திரி 8வது நாள் சொல்ல வேண்டிய அம்பாள் மந்திரம்
108 முறை லட்சுமி போற்றிகளை உச்சரித்து நாணயங்களால் அர்ச்சனை செய்த பின்பு, மனதார குடும்ப கஷ்டம் தீரவும், செல்வம் பெருகவும், பணம் சேரவும், தொழிலில் சிறந்து விளங்கவும் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். தீப, தூப, ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்யுங்கள். இது போல ஒவ்வொரு நாளும் அந்தி சாயும் மாலை வேளையில் நல்ல நேரத்தில் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை இந்த லட்சுமி பூஜையை செய்யுங்கள். 48 வாரங்கள் செய்தால் எப்பேற்பட்ட கஷ்டமும் உங்களை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். குறிப்பாக பண ரீதியான பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்கள், இந்த லட்சுமி பூஜையை செய்து பயனடையலாம்.