நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம். என்னதான் பணத்தை சம்பாதித்தாலும் நம்முடைய வாழ்க்கையில் பண நெருக்கடியும், பணக்கஷ்டமும் அடிக்கடி ஏற்படத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட பண நெருக்கடியையும், பணக்கஷ்டத்தையும் தீர்ப்பதற்கு என்று இருக்கக்கூடிய தெய்வமாக குபேர பகவான் திகழ்கிறார். குபேர பகவானை நாம் முறையாக வழிபாடு செய்யும்பொழுது குபேரரின் அருளால் நமக்கு பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக மிகவும் சிறப்பு வாய்ந்த மாசி மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் நாம் குபேர பூஜை செய்யும் பொழுது குபேர யோகம் கிடைக்க பெற்று பண நெருக்கடி இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். அந்த பூஜையை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணம் நெருக்கடி நீங்க குபேர பூஜ
குபேர பகவான் என்பவர் சிவபெருமானின் தீவிர பக்தனாக திகழக்கூடியவர். சிவபெருமானுக்கு என்று நடத்தக்கூடிய அனைத்து விதமான பூஜைகளிலும் குபேர பகவான் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் குபேர பகவானை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த மாதமாக மாசி மாதம் திகழ்கிறது. அதிலும் குறிப்பிட்ட சில நாட்களில் நாம் குபேர பூஜை செய்யும் பொழுது குபேர பகவானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்று கூறப்படுகிறது. அதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
மாசி மாதத்தில் இந்த குபேர பூஜையை செய்வதற்கு சில குறிப்பிட்ட நாட்கள் இருக்கின்றன. இந்த நாட்களில் ஏதாவது ஒரு நாளை மட்டும் தேர்வு செய்து நாம் குபேர பூஜை செய்தாலே நமக்கு குபேர யோகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அந்த நாட்கள் பிப்ரவரி மாதம் 20, 26, 27 மார்ச் மாதம் 5, 6, 13 இந்த ஆறு நாட்களில் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்து மாலை 6:30 மணியிலிருந்து இரவு 10:30 மணிக்குள் இந்த குபேர பூஜையை நாம் செய்ய வேண்டும்.
குபேர பூஜை செய்யக்கூடிய நாளில் வீட்டை சுத்தம் செய்து பூஜையறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு சந்தனம் குங்குமம் வைத்து வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் குபேரரின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக ஒன்பது அகல் விளக்குகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி ஏற்ற வேண்டும். மேலும் இது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். குபேரரின் படம் இல்லை என்றால் பூஜையறையில் மகாலட்சுமி படம் இருக்கும் இடத்தில் கூட இந்த தீபத்தை நாம் ஏற்றலாம்.
பிறகு குபேரருக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைக்க வேண்டும். எதுவும் கிடைக்கவில்லை என்றால் வெறும் கற்கண்டை மட்டுமாவது நாம் வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். பிறகு குபேரருக்குரிய இந்த ஒரு மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். 27 முறை உச்சரித்த பிறகு வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டு வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இந்த தீபமானது குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது எரிய வேண்டும். இந்த முறையில் குபேரரை முழுமனதோடு நினைத்து இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு குபேரரின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு பண நெருக்கடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
மந்திரம்
“ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவ ணாய தீமஹி!
தந்நோ குபேர ப்ரசோதயாத்”
இதையும் படிக்கலாமே:செல்வ வளம் பெருகி கடன் தீர தேய்பிறை அஷ்டமி வழிபாடு
செல்வ வளத்தை வாரி வழங்கக்கூடிய குபேர பகவானை இந்த முறையில் முழுமனதோடு நினைத்து மாசி மாதத்தில் ஒரு நாள் மட்டும் இந்த பூஜையை செய்து குபேரரின் அருளை பெறுவதோடு செல்வ செழிப்புடனும் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.