பணத்தை சேர்க்க வேண்டும் என்பதற்காக பலரும் பல விதங்களில் முயற்சி செய்கிறார்கள். அப்படி முயற்சி செய்தும் பலருக்கும் பணத்தை சேர்த்து வைக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். நியாயமாக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் நம்மிடம் நிரந்தரமாக நிலைத்து இருக்காமல் ஏதாவது ஒரு ரூபத்தில் செலவாகிக் கொண்டே செல்கிறது என்றாலும் நாம் உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காமல் இருந்தாலும் பணத்தை ஈர்க்கும் சக்தி நம்மிடம் இல்லை என்று அர்த்தம். அந்த சக்தியை அதிகரிப்பதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு நாளிலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஹோரை என்பது இருக்கும். அந்த ஹோரை அறிந்து ஒருவர் வேலையை செய்கிறார் என்றால் கண்டிப்பாக முறையில் அந்த வேலையில் அவர்களால் வெற்றியை பெற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த ஹோரையின் அடிப்படையில் எப்படி நாம் வேலையை செய்கிறோமோ அதே போல் தான் திதியை பார்த்தும் வேலை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அந்த வகையில் நமக்கு பல நன்மைகளை தரக்கூடிய திதியாக திகழ்வது பௌர்ணமி திதி.
இந்த மாதம் பௌர்ணமி திதி என்பது வியாழக்கிழமையுடன் சேர்ந்து வருகிறது. பெரும் பணத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் குபேர பகவான் என்பதால் வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமி அன்று பணத்தை ஈர்ப்பதற்காக நாம் இந்த பரிகாரத்தை செய்தால் அதற்கு பல மடங்கு பலம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பரிகாரத்தை அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் செய்துவிட வேண்டும். இது சுக்கிர ஹோரையாக கருதப்படுகிறது. சுக்கிரன் என்பவன் ஆடம்பர வசதியை அருளக்கூடியவராகவும், பணம், பொருள், செல்வம் என்று அனைத்தையும் தரக்கூடியவராகவும் திகழ்கிறார். அதனால் அந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய பரிகாரம் நமக்கு இன்னும் அதிக பலனை தரும் என்றே கூறலாம்.
இந்த பரிகாரத்தை நாம் நம்முடைய வீட்டு சமையல் அறையில் தான் செய்ய வேண்டும். பொதுவாக சமையல் அறையில் பல பொருட்கள் பணத்தை ஈர்க்கும் தன்மை உடையதாக இருக்கின்றன. அதனால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் தங்களுடைய பணத்தை சேர்த்து வைப்பதற்கு சமையலறையை பெரிதும் நம்பி இருந்தார்கள். அரிசி வைக்கும் பானை, புளி இருக்கும் பானை, வெந்தயம், சோம்பு, கடுகு, துவரம் பருப்பு போன்ற பொருட்கள் வைத்திருக்கும் பாத்திரங்களுக்குள் பணத்தை சேர்த்து வைத்திருந்தார்கள். இப்படி வைப்பதன் மூலம் அவர்களுக்கு பணம் அதிக அளவில் சேர ஆரம்பித்தது.
அந்த வகையில் பௌர்ணமி தினத்தன்று சுக்கிர ஹோரையில் நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய துவரம் பருப்பு டப்பாவிற்குள் பணத்தை ஈர்க்கும் சக்தி கொண்ட சுக்கை வைக்க வேண்டும். அடுத்ததாக இதனுடன் நம் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு தங்கத்தை வைக்க வேண்டும். தங்கமே இல்லை என்பவர்கள் ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்கலாம். இப்படி சுக்கிர ஹோரையில் துவரம் பருப்பிற்குள் நாம் இந்த பொருளை வைத்து பௌர்ணமி திதி நிறைவடையும் வரை விட்டுவிட வேண்டும். பௌர்ணமி திதி நிறைவடைந்த பிறகு இதில் இருக்கக்கூடிய பொருட்களை எடுத்து நாம் மற்ற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்படி செய்வதன் மூலம் பணவரவு என்பது அதிகரிக்கும். நம்முடைய முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற வருமானம் உண்டாகும். பல விதங்களில் வருமானத்தை பெருக்குவதற்குரிய வழிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: கடவுள் கனவில் வந்தால் என்ன பலன்
இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை பௌர்ணமி தினத்தன்று குறிப்பிட்ட இந்த நேரத்தில் செய்பவர்களுக்கு பணம் பல மடங்கு வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.