நாளை செவ்வாய்க் கிழமையுடன் சேர்ந்து வரும் பிரதோஷம்! கடன் சுமை குறைய சிவன் வழிபாட்டை இப்படி செய்தால் போதுமே.

sivan-vilakku
- Advertisement -

பிரதோஷத்தன்று நாம் செய்யக்கூடிய சிவ வழிபாடு நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா தோஷங்களுக்கும் விமோசனம் கொடுக்கக்கூடியது. அப்படியிருக்கையில் நாளை செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வந்திருக்கக்கூடிய பிரதோஷ தினத்தில் கடன் சுமை குறைய சிவபெருமானை எப்படி வழிபாடு செய்வது என்பதைப் பற்றிய ஆன்மீக ரீதியான ஒரு தகவலைத் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

நாளைய தினம் சிவபெருமானை நினைத்து அதிகாலை வேளையிலேயே கண்விழித்து 6 மணிக்கு முன்பாகவே தலைக்கு குளித்து விட வேண்டும். நீங்கள் தலைக்கு குளிக்கும் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியைப் போட்டு, ‘ஓம்’ என்ற மந்திரத்தில் அந்த தண்ணீரில் வலது கை ஆள்காட்டி விரலால் எழுதி, கடன் சுமை குறைய வேண்டும் என்று மனதார நினைத்து கொண்டு அந்த தண்ணீரில் தலைக்கு குளித்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு பூஜை அறைக்கு வந்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லி தீபம் ஏற்றி, நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு விரதத்தை தொடங்க வேண்டும். விரதம் இருப்பது என்பது அவரவர் உடல்நிலையை பொறுத்தது. பிரதோஷ நாளில் உங்கள் மனதார மனதிற்குள் ‘நமசிவாய நமசிவாய நமசிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது எல்லா தோஷங்களுக்கும் ஒரு தீர்வு கொடுக்கும். கடன் பிரச்சனைக்கும் சேர்த்துதான்.

வேலைக்கு செல்பவர்கள் வேலை செய்யக்கூடிய நேரத்தைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் இந்த நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் மனதார சொல்லி கொண்டே இருக்க வேண்டும். வாய்விட்டு சொல்ல கூடிய மந்திரத்தைவிட, மனதிற்குள் உதடு அசையாமல் சொல்லக்கூடிய இந்த சிவ மந்திரத்திற்க்கு பலமடங்கு சக்தி உண்டு.

- Advertisement -

மாலை 4.30 மணிக்கு மேலாக உங்களுடைய வீட்டு பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, சிவனின் திருவுருவப்படம் இருந்தால் அதற்கு வில்வ இலை மாலை போட்டு, தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் சிவலிங்கம் இருந்தால் சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்துவிட்டு, அந்த லிங்கத்திற்கு சந்தனக் குங்கும பொட்டு வைத்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பின்பு 27 வில்வ இலைகள், கட்டாயம் தேவை. 27 வில்வ இலைகளைக் கொண்டு சிவனுக்கு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யுங்கள். (27 ஏழு முறை மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.) ஒரே ஒரு மாதுளம் பழத்தை எடுத்து உள்ளே இருக்கும் விதைகளை உதிர்த்து, ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு நிவேதனமாக வைத்து விடுங்கள். கடன் சுமை குறைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு எம்பெருமானுக்கு தீப தூப ஆராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

பூஜைக்காக பயன்படுத்திய 27 வில்வ இலைகளை ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். உங்களுடைய கடன் சுமை படிப்படியாகக் குறையத் தொடங்கும். வில்வ இலைகள் வாடினாலும் அதற்கு இருக்கக்கூடிய மகத்துவம் குறையாது. கடன்சுமை குறையும் வரை அந்த வில்வ இலைகள் அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் இருக்கட்டும்.

முடிந்தவர்கள் நாளையதினம் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு சென்று சிவபெருமானின் ஆலயத்தில் அமர்ந்து கடன் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்துகொண்டு உங்களால் முடிந்தால் மாதுளம் பழங்களை உதிர்த்து உள்ளே இருக்கும் மாதுளை முத்துக்களை, கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம். குறிப்பாக குழந்தைகள் வருவார்கள் அல்லவா. குழந்தைகளுக்கு இந்த மாதுளம் பழத்தை, சிவபெருமானை நினைத்து தானம் கொடுப்பது சிறந்த பலனை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நாளை மேல் சொன்ன வழிபாட்டை நம்பிக்கையோடு செய்து நல்ல பலனைப் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -