பௌர்ணமி முடிந்து ஐந்தாவது திதியாக வரக்கூடியது தான் பஞ்சமி திதி. பஞ்சமி திதி என்பது வராகி அம்மனுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறை பஞ்சமி என்பது நம்முடைய கஷ்டங்களை தீர்த்து வேண்டிய வரத்தை அருளக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பங்குனி தேய்பிறை பஞ்சமி அன்று வராகி அம்மனின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பங்குனி தேய்பிறை பஞ்சமி வழிபாடு
பெருமாளின் ஒரு அவதாரமான வராக மூர்த்தியின் பெண் அவதாரமே வராகி அம்மன் என்றும் சப்த கன்னிகளில் ஒருவராக திகழக்கூடியவர் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக பஞ்சமி திதி திகழ்கிறது. பலரும் இந்த பஞ்சமி திதி அன்று விரதம் இருந்து அருகில் இருக்கக்கூடிய வராகி அம்மனின் ஆலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு வராகி அம்மனின் அருளை பெறுவார்கள். வீட்டிலேயே வராகி அம்மனை வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எந்த முறையில் வழிபாடு செய்தால் அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும் என்று தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த பஞ்சமி திதி வழிபாட்டை நாம் மார்ச் மாதம் 18ஆம் தேதி இரவு 8:40 லிருந்து 9:40க்குள் செய்யலாம் அல்லது மார்ச் மாதம் 19ஆம் தேதி காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 6:00 மணியிலிருந்து இரவு 10:32 மணிக்குள் செய்யலாம். இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தங்களுடைய வசதிக்கேற்ப தேர்வு செய்து வீட்டில் வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
வீட்டில் வராஹி அம்மனின் சிலை இருக்கும் பட்சத்தில் அன்றைய தினத்தில் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வராகி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், குங்குமம், பழங்கள், திரவியம் போன்றவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு நல்ல தண்ணீரை ஊற்றி சுத்தமாக கழுவி ஈரமில்லாமல் துடைத்துவிட்டு வராகி அம்மனுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து வாசனை மிகுந்த மலர்கள் மற்றும் சிவப்பு நிற மலர்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
வராகி அம்மனுக்கு அன்றைய தினத்தில் நாம் வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு, மாதுளம் பழம், மாதுளம் பழச்சாறு, பானகம் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இதில் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு கிழங்கு, மாதுளம் பழச்சாறு இவற்றை வைக்க வேண்டும். இது எப்பொழுதும் செய்யும் வழிபாடு தான். ஆனால் இந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக நிலை வாசலை சுத்தம் செய்து நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு சிறிய தாம்பாள தட்டை எடுத்து ஒவ்வொன்றின் மேலும் ஒரே ஒரு வெற்றிலையை வைத்து அதற்கு மேல் கற்கண்டை வைத்து நிலை வாசலின் இரண்டு புறங்களிலும் வைத்துவிட வேண்டும் .
இப்படி வைத்து விட்டு நாம் வராகி அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் வராகி அம்மனின் மூல மந்திரத்தை கூறுவது, வராகி அம்மனின் திருநாமங்களை உச்சரிப்பது போன்றவற்றை மேற்கொண்டு வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் அல்லது மிகவும் எளிமையான “ஓம் வாராகி தாயே வந்தருள வேண்டும்” என்று கூறி கூட அர்ச்சனை செய்யலாம்.
இப்படி நாம் நிலைவாசலில் வெற்றிலை கற்கண்டை வைத்துவிட்டு வராகி அம்மனின் இந்த மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வராகி அம்மன் நம் வீட்டிற்கு வந்து நாம் கேட்ட வரங்கள் அனைத்தையும் அருள்வாள். அன்றைய தினம் முழுவதும் இந்த வெற்றிலையும் கற்கண்டும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் கற்கண்டை எடுத்து எறும்புகளுக்கு தானமாக போட்டுவிட்டு வெற்றிலையை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் நெய்வேத்தியம்
நம்முடைய கஷ்டங்களை தீர்த்து நமக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருக்கக்கூடிய வராகி அம்மனை இந்த முறையில் பஞ்சமி தினத்தன்று வழிபாடு செய்பவர்களுடைய வீட்டிற்கு வராகி அம்மனே எழுந்தருளி அனைத்து விதமான நன்மைகளையும் வழங்குவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.