அட! சுவையான, சூப்பரான, காரசாரமான பருப்பு உருண்டை குழம்பை வைப்பது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம போச்சே! இப்படி செய்தால் உருண்டைகள் உடைவதற்கு வாய்ப்பே இல்லை.

urundai-kuzhambu3

பாரம்பரியமாக வைக்கக் கூடிய குழம்பு வகைகளில் இந்த பருப்பு உருண்டை குழம்பும் ஒன்று. நிறைய பேருக்கு இதை பக்குவமாக செய்ய தெரியாது. ருசியான குழம்பு வைக்க தெரியாது. இருப்பினும் இதன் சுவைக்கு எல்லோருடைய நாக்கும் அடிமை. உப்பு காரம் புளிப்பு பருப்பு சேர்ந்த ஒரு கலவையான காரசாரமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி வைப்பது என்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்க மிஸ் பண்ணாதீங்க! ஒருவாட்டி இந்த குழம்பு வச்சா திரும்பத் திரும்ப வச்சிகிட்டே இருப்பீங்க. சாதத்துக்கு அவ்வளவு சூப்பரா இருக்குங்க!

முதலில் 100 கிராம் அளவு கடலைப்பருப்பை தண்ணீரில் போட்டு இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இந்த கடலைப்பருப்பில் 3 காய்ந்த மிளகாயையும் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பூண்டு – 4 பல், இஞ்சி – சிறிய துண்டு, சோம்பு – 1 ஸ்பூன் இதோடு கடலைப்பருப்பில் போட்டு ஊற வைத்திருக்கும் வெறும் வரமிளகாயை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு முதலில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்து, அடுத்தபடியாகத் தான் கடலைப்பருப்பை நன்றாக தண்ணீர் வடிகட்டி, அதன் பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக 85% அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை அரைக்கும் போது தண்ணீர் ஒரு சொட்டு கூட ஊற்றக் கூடாது என்பது மிக மிக முக்கியம்.

urundai-kuzhambu4

இந்த மாவு மசால் வடைக்கு மாவு அரைப்பது போல, கெட்டியாக இருக்கவேண்டும். கொரகொரப்பாக இருக்க வேண்டும். தண்ணீர் ஆகிவிடக்கூடாது. இப்போது இந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி இந்த மாவோடு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தழையை, இந்த மாவுக்கு தேவையான உப்பு, சேர்த்து நன்றாக பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். ரொம்ப அழுத்தம் கொடுத்து உருண்டை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக குழம்பை தாளிக்க வேண்டும். ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து ஊற வைத்து புளிக்கரைசலை முதலில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து – 4 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, வெங்காய வடகம் இருந்தால் தாளித்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் கடுகு, வெந்தயம், ஜீரகம் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து தாளித்து, அதன்பின்பு கருவேப்பிலை போட்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 30 பல் பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

urundai-kuzhambu1

வெங்காயம் வதங்கியவுடன் பழுத்த பெரிய தக்காளி – 1 பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு, குழம்பு மிளகாய் தூள் – 4 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன், சேர்த்து ஒரு நிமிடங்கள் வரை வதக்கி, கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை கடாயில் சேர்த்து, நன்றாக 7 நிமிடங்கள் வரை தீயை உயர்த்தி வைத்து கொதிக்க வைக்க வேண்டும். (இந்த இடத்தில் உப்பு காரம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.)

urundai-kuzhambu2

புளியின் பச்சை வாடை முழுவதும் நீங்கி விட்ட பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை பக்குவமாக எடுத்து குழம்பில் போடுங்கள். குழம்பில் போட்டு கரண்டியை வைத்து எக்காரணத்தைக் கொண்டும் கலந்து விட்டு விடக்கூடாது. உருண்டை 3 நிமிடங்கள் வெந்த பின்பு தான் கரண்டியைக் கடாய்க்கு கொண்டு செல்ல வேண்டும். அதுவும் பக்குவமாக லேசாக உருண்டைகளை திருப்பி வைத்து, வேக வைக்க வேண்டும். மொத்தமாக 10 விருந்து 12 நிமிடங்களில் உருண்டை நன்றாக வெந்துவிடும்.

urundai-kuzhambu6

இறுதியாக அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, 3 லிருந்து 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். குழம்பு சுண்டி எண்ணெய் மேலே வந்து தகதகவென வாசனையோடு இருக்கும். சுட சுட குழம்பை மூடி விடக்கூடாது. சூடான சாப்பாட்டோடு ஒரு கரண்டி குழம்பு ஊற்றி ஒரு உருண்டையை வைத்தால் போதும் சாதம் மொத்தமும் உள்ளே இறங்கி இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருக்கா நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

urundai-kuzhambu5

பின் குறிப்பு: உங்களுக்கு இந்த உருண்டைகளை குழம்பில் போட்டால் உடைந்து விடுமோ என்ற பயம் இருந்தால், இட்லி சட்டியில் வைத்து ஒரு ஆவியில் வேகவைத்தும் போடலாம். இருப்பினும் இதனுடைய சுவை கொஞ்சம் குறைவாக இருக்கும். உருண்டைகள் கொஞ்சம் கல்லு போல மாறி இருக்கும். சில சமயங்களில் மாவு அரைக்கும்போது நீர்த்து விட்டால், அதில் அரிசி மாவு சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம் ஆனால் இப்படியெல்லாம் செய்யும் போது நிச்சயமாக சுவையில் மாற்றம் தெரியும்.

இதையும் படிக்கலாமே
கவரிங் நகைகள் எவ்வளவு நாளானாலும் கறுத்துப் போய் நிறம் மாறாமல் புதிதாக இருக்க இந்த 2 டிப்ஸ் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.