வெங்காயம், தக்காளி, தேங்காய், எதுவுமே சேர்க்காமல் ஒருமுறை இந்த சட்னி அரைச்சு பாருங்க. இதோட சுவைக்கு பக்கத்தில் வேறு எந்த சட்னியும் நிக்காது.

red-chutney
- Advertisement -

கொஞ்சம் மழை பெய்ய தொடங்கி விட்டால் வெங்காயம் தக்காளியின் விலை கடகடவென உயர ஆரம்பித்து விடும். இந்த வெங்காயம் தக்காளி தேங்காய் எதுவுமே இல்லாமல் வீட்டில் இருக்கக்கூடிய சுலபமாக மளிகை பொருட்களை வைத்தே காரசாரமான ஒரு சட்னியை எப்படி அரைப்பது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அது மட்டுமில்லாமல் ஒரே மாதிரி சட்னியை ஒரே சுவையில் மீண்டும் மீண்டும் சாப்பிட்டால் கொஞ்சம் போரடிக்கும் அல்லவா. வித்தியாசமாக இந்த சட்னியை ட்ரை பண்ணி பாருங்க.

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய தோலுரித்த – 5 பூண்டுப் பல்லைப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும். வறுபட்ட இந்த பூண்டினை எண்ணெயை வடிகட்டி தனியாக தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (வறுபட்ட பூண்டில் ஒரு துளிகூட பச்சை வாடை வீசக்கூடாது. பச்சை வாடை இருந்தால் சட்னியின் சுவை நன்றாக இருக்காது.)

- Advertisement -

அடுத்து அதே கடாயில் இன்னும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், வேர்கடலை – 3 டேபிள்ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். (பருப்பு சிவப்பு நிறத்தில் வறுபட வேண்டும் கவனித்துக் கொள்ளுங்கள்.) இறுதியாக பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன், சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இதோடு வறுத்து வைத்திருக்கும் பூண்டு, நெல்லிக்காய் அளவு புளி, உப்பு, வைத்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி சட்னியை மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் தனியாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கரைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்து இதற்கு சிறிய தாளிப்பு கொடுக்க வேண்டும். 2 ஸ்பூன் நல்லெண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, வர மிளகாய், தாளித்து சட்னியில் கொட்டிக் அரைத்து சுட சுட இட்லி தோசை சப்பாத்திக்கு சாப்பிட்டுப்பாருங்கள். அவ்வளவு அருமையாக இருக்கும். இதே சட்னியை கொஞ்சம் கெட்டியாக துவையல் போல அரைத்து சுடு சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டாலும் சுவையாகத்தான் இருக்கும்.

உங்களுக்கு இந்த சட்னியில் கூடுதல் சுவை தேவை என்று நினைத்தால், உங்க வீட்டில் தேங்காய் இருந்தால் இதோடு ஒரு கைப்பிடி அளவு தேங்காயை வைத்து கூட அரைத்து சாப்பிட்டு கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். உங்களுக்கு இந்த சட்னி ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -