ஒரு மனிதன் கடன் வாங்கும் பொழுது தன் தகுதிக்கு உட்பட்டதா? என்பதை பார்த்து தான் வாங்க வேண்டும். வாங்கினால் அதை சரியாக கட்டி விட முடியுமா? என்று யோசித்து வாங்க வேண்டும். கேட்டு கேட்டு மற்றவர்கள் நமக்கு கொடுக்கிறார்கள், என்பதற்காக வாங்கி வைத்துக் கொண்டால் பிறகு கடனை அடைக்க முடியாமல் திண்டாட வேண்டியது தான். ஒருமுறை கடன் வாங்கி விட்டால் அதிலிருந்து மீள்வது என்பது சிரமமான காரியம்.
கிரக அமைப்புகள் ஒரு மனிதனுக்கு சரியாக இல்லாவிட்டால் அவன் கடனாளி ஆகிறான். அந்த கடனிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான். ஒன்று போனால் இன்னொன்று வருகிறது என்பது போல அவனுக்கு மாறி மாறி பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கும். அதற்காக அவன் கடன் வாங்கிக் கொண்டே தான் காலம் கழியும். இந்த கடன் சுமை தீர்வதற்கு எளிய பரிகாரம் ஒன்று உள்ளது. வாருங்கள் அதைப் பற்றிய சுவாரசியமான ஆன்மீகம் சார்ந்த தகவலை அறிந்து கொள்வோம்.
கடன் சுமை தீர்வதற்கு சாஸ்திரங்கள் பலவற்றில் பலவிதமான பரிகாரங்கள் சொல்லுகின்றது. கடன் தீர்க்கும் மந்திரங்களும், கடன் தீர்க்கும் தாந்த்ரீகங்களும், பரிகாரங்களும் உண்டு. அந்த வரிசையில் இந்த ஒரு தானம் செய்வதன் மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் அளப்பரியது. ஒரு பாத்திரத்தில் சம அளவு பாசிப்பருப்பும், வெல்லமும் கலந்து வைத்து ஊற வைக்க வேண்டும். இரவு முழுவதும் இது ஊறிய பின்னர் மறுநாள் காலையில் கொண்டு போய் பசு மாடுகளுக்கு தானம் கொடுக்க வேண்டும்.
பசுக்களுக்கு பாசிப்பருப்பும், வெல்லமும் சேர்த்து தானம் கொடுக்கும் பொழுது குலதெய்வ ஆசீர்வாதம் கிடைக்கும். கடன் தீர்ப்பதற்கு இந்த ஒரு எளிய வழி மிகப் பெரிய பலனை கொடுக்கும். பாசிப்பருப்பை பசுக்களுக்கு மட்டுமல்லாமல் ஏழை, எளியவர்களுக்கு தானம் கொடுக்க, வறுமை இல்லா வாழ்வும், கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையும் தீரும் என்பது ஐதீகம்.
குழந்தைகள் காப்பகம், ஆசிரமம் போன்ற இடங்களுக்கு பாசிப்பருப்பையும், பச்சரிசியையும் தானம் செய்யுங்கள். பாசிப்பருப்பு உடலுக்கு பலவிதமான நன்மைகளை தரக்கூடியது. ஆன்மீக ரீதியாக இந்த பருப்பு கடன்களை தீர்க்க வல்லது. வாரம் ஒரு முறை பாசிப்பருப்பை கொண்டு வெல்லம் போட்டு இனிப்பான பாயாசம் தயார் செய்து கொள்ளுங்கள். இதை அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று நைவேத்திய பிரசாதமாக இறைவனுக்கு சமர்ப்பித்து, கடன்கள் முழுமையாக எனக்கு தீர வேண்டும். நான் தீராத கடனில் அவதிப்படுகிறேன். இருக்கின்ற கடனை எல்லாம் அடைத்து விட்டு, மீண்டும் கடன் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டுகிறேன்.. என்று மனமாற பிரார்த்தித்துக் கொண்டு, அந்த பாயாசத்தை அங்கு வரும் பக்தர்களுக்கும், ஏழை, எளியவர்களுக்கும் தானம் செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே:
வளர்பிறை பஞ்சமி குத்துவிளக்கு வழிபாடு
தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். பசித்தவர்களுக்கு உங்களால் முடிந்த பொழுதெல்லாம் உணவு பொட்டலங்கள் வாங்கி கொடுங்கள். பணம் இருக்கும் போது செய்யும் தானத்தை விட, நம்மிடம் இல்லாத பொழுது செய்யும் தானத்திற்கு தான் பலன்கள் அதிகம். பாசிப்பருப்பை சமையலிலும் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் பாசிப்பருப்பு பாயாசம் செய்து மகாலட்சுமிக்கு நைவேத்தியம் படைத்து பிரார்த்தித்து வந்தால் கடன் தீருவதோடு, வருமானம் இரட்டிப்பாகும்.