10 நிமிடத்தில் ஆரோக்கியம் தரும் தித்திக்கும் பாசிப்பருப்பு அல்வா!குக்கரிலேயே இப்படி செய்து கொடுத்தால் பாராட்டு வாங்குவது உறுதி!

alwa
- Advertisement -

பருப்பு வகைகளில் பாசிப்பருப்பு மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கின்றது. இந்த பாசி பருப்பு வைத்து செய்யப்படும் இனிப்பு வகைகள் மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும். மழை மற்றும் குளிர் காலங்களில் செய்யக்கூடிய இந்த பாசிப்பருப்பு அல்வா வட இந்திய மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை விரும்பி சாப்பிடுவார்கள். தித்திக்கும் இந்த பாசிப்பருப்பு அல்வா பத்தே நிமிடத்தில் குக்கரிலேயே நாம் செய்து அசத்தி விடலாம்! அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

pasi-paruppu

‘பாசிப்பருப்பு அல்வா’ தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 1 கப், தண்ணீர் – 2 கப், பால் – 1 கப், சர்க்கரை – 11/2 கப், வறுத்த ரவை – 1/4 கப், நெய் – 4 டேபிள்ஸ்பூன் முந்திரி – 15, ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்.

- Advertisement -

‘பாசிப்பருப்பு அல்வா’ செய்முறை விளக்கம்:
முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனை குக்கரில் சேர்த்து ஈரப்பதம் இல்லாமல் வறுத்துக் கொள்ளுங்கள். பாசிப்பருப்பு வறுபட வறுபட ஒட்டாமல் வரும். அந்த சமயத்தில் கொஞ்சமாக நெய் சேர்த்து வாசம் வர வறுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து விடுங்கள்.

pasi-paruppu

இரண்டிலிருந்து மூன்று விசில் பாசிப் பருப்பு நன்கு வெந்து வந்திருக்கும். உங்களில் உங்களின் குக்கருக்கு ஏற்ப விசில் விட்டு கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து பிரஷர் போனதும் குக்கரை திறந்து கொள்ளுங்கள். வெந்த பருப்பை கரண்டி வைத்து மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த திக்கான பால் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டால் சற்று தளர ஆரம்பிக்கும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேன் வைத்துக் கொள்ளுங்கள். 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு அதில் முந்திரி பருப்புகளை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். முந்திரி வறுபட்டதும் பாசி பருப்பை அதில் ஊற்றி கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதனுடன் வறுத்த ரவையை சேர்த்து கிண்டும் பொழுது பருப்பு திரண்டு அல்வா போல கெட்டியான பதத்திற்கு வரும்.

halwa1

இந்த சமயத்தில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். நெய் தெளிந்து கரண்டியில் பாசிப்பருப்பு ஒட்டாமல் அல்வா பதத்திற்கு திரண்டு வரும். அந்த சமயத்தில் பொடித்து வைத்துள்ள ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அல்வாவை கரண்டியில் எடுத்து பேனில் போட்டால் பொத்தென்று அழகாக விழும். அது தான் சரியான பதம். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து சுட சுட கரண்டியால் எடுத்து தட்டில் வைத்து பரிமாற வேண்டியது தான்.

ஆரோக்கியம் நிறைந்த தித்திக்கும் இந்த பாசிப்பருப்பு அல்வா நொடியில் செய்து விடலாம். திடீரென ஏதாவது ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் பொழுது இதை செய்து கொடுக்கலாம். அதே போல பூஜைகளில் பிரசாதத்திற்கு நைவேத்தியம் வைக்கவும் இதை செய்து கொடுப்பார்கள். நல்ல நாள், விசேஷங்களில் இந்த முறையில் பாசிப்பருப்பு அல்வா செய்து குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -