கடலைப்பருப்பு போட்டு பீர்க்கங்காய் பொரியல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

peerkangai
- Advertisement -

நீர்ச் சத்து நிறைந்த காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று. பெரும்பாலும் பீர்க்கங்காய் வைத்து சிலர் கூட்டு செய்வார்கள். சிலர் பொரியல் செய்வார்கள். கொஞ்சம் வித்தியாசமான முறையில் கடலைப்பருப்பு சேர்த்து பீர்க்கங்காயை இப்படி பொரியல் செய்தால் இதன் ருசி மிகவும் நன்றாக இருக்கும். எல்லா வகையான குழம்பு சாதத்திற்கும் இதை சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். வாங்க இந்த சூப்பரான பீர்க்கங்காய் பொரியல் ரெசிபியை நாமும் தெரிந்துகொள்வோம்.

peerkangai1

முதலில் 500 கிராம் அளவு இருக்கும் பீர்க்கங்காயை தோல் சீவி விட்டு கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக, க்யூப் வடிவத்தில் வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 2 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் போட்டு ஒரு விசில் வைத்து வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பில் வேகவைத்த தண்ணீர் ஒரு சொட்டு கூட இருக்கக் கூடாது. கடலைப்பருப்பு வெந்திருக்க வேண்டும். குழைய வேகக் கூடாது. கடலைப்பருப்பு முழு கலைப்பருப்பாக தான் இருக்க வேண்டும். (கடலைப் பருப்பை வேகவைக்கும் போது கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் 3 ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 4 இரண்டாக கீறியது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு, பெருங்காயம் – 1/2 ஸ்பூன், சேர்த்து வெட்டி வைத்திருக்கும் பீர்க்கங்காயை எண்ணெயில் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி ஒரு மூடி போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

peerkangai2

பீர்க்கங்காய் நீர் காய் என்ற காரணத்தால் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு மூடி போட்டாலே பீர்க்கங்காயில் இருந்து தண்ணீர் விடத் தொடங்கும்.

- Advertisement -

அந்தத் தண்ணீரிலேயே பீர்க்கங்காய் வெந்துவிடும். பீர்க்கங்காய் பாதி வெந்தவுடன் தேவையான அளவு உப்பு தூவி, மூடி எதுவும் போடாமல் காயில் விட்டு இருக்கும் தண்ணீர் அனைத்தையும் சுண்ட வைக்க வேண்டும்.

peerkangai3

தண்ணீர் அனைத்தும் சுண்டி வந்தவுடன் வேக வைத்திருக்கும் கடலைப்பருப்பை தூவி, இரண்டு நிமிடம் போல கலந்து விட்டு இறுதியாக இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவலை மேலே தூவி, ஒரு முறை பொரியலை கலந்து அடுப்பை அணைத்து விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை மேலே தூவி சுடச்சுட பரிமாறுங்கள். சூப்பரான பீர்க்கங்காய் கடலை பருப்பு கறி தயார்.

- Advertisement -