அடிக்கிற வெயிலுக்கு சாப்பிடவே பிடிக்கலையா? ஆரோக்கியமான ‘மிளகு சாதம்’ இப்படி ஒரு முறை செய்து பாருங்கள், தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாது!

pepper-rice4

அடிக்கடி மிளகை உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுவார்கள். ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்கிற பழமொழி கடுகை குறிப்பது அல்ல! உண்மையில் அது மிளகை குறிப்பது ஆகும். மிளகு சமையலுக்கு சேர்க்கப்படும் ஒரு வகை பொருள் மட்டுமல்ல, அது ஒரு மூலிகை விதையாகவும் இருக்கிறது. இந்த மிளகை கொண்டு செய்யப்படும் இந்த சித்திரண்ணம் அதாவது கலவை சாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Milagu benefits in Tamil

‘மிளகு சாதம்’ செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி அல்லது சாதாரண அரிசி – ஒரு கப்
வறுத்து அரைத்து வைத்த மிளகு தூள் – 2 தேக்கரண்டி
பொடித்து வைத்த சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் அல்லது நெய் – 2 தேக்கரண்டி

கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்
பொடித்த முந்திரி பருப்பு – 3 டீஸ்பூன்

pepper-rice

வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவிற்கு

- Advertisement -

‘மிளகு சாதம்’ செய்முறை விளக்கம்:
முதலில் மிளகை வெறும் கடாயில் லேசாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள். சீரகத்தை நன்கு இடித்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். முந்திரிப் பருப்புகளை சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளுங்கள். வேர்க்கடலையை கடாயில் போட்டு வறுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். இவற்றை நீங்கள் முன்கூட்டியே செய்து வைத்திருந்தால் பத்தே நிமிடத்தில் மிளகு சாதம் சிரமமின்றி தயார் செய்து விடலாம்.

pepper-rice1

பாஸ்மதி அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பாத்திரத்தில் அரிசியை வேக வைத்து உதிரி உதிரியாக வடித்துக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசி பயன்படுத்தாதவர்கள் சாதாரண அரிசியை எப்போதும் போல உதிரி உதிராக வடித்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு அடி கனமான வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் அல்லது நெய் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள்.

pepper-rice2

எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு பொரிக்க விடுங்கள். பின்னர் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும். பின்னர் கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்துள்ள சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூளை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து விட்டு உதிரி உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளுங்கள்.

pepper-rice3

சாதத்தில் எல்லா இடங்களிலும் சீராக கலவை கலந்து வருமாறு நன்கு கிளறி விட வேண்டும். அரிசி உடைந்து விடவும் கூடாது என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள். மிளகு சாதம் செய்வதற்கு மிளகுத்தூளை கடையில் வாங்கி செய்தால் நன்றாக இருக்காது. எனவே அதை மட்டும் வீட்டில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை அனைத்து விட்டு நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கி பரிமாறினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் ரசித்து ருசித்து சாப்பிட்டு முடித்து விடுவார்கள்.