ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் என்பது இரண்டு முறை வரும். இதில் ஒரு பிரதோஷத்தை வளர்பிறை பிரதோஷம் என்றும் மற்றொரு பிரதோஷத்தை தேய்பிறை பிரதோஷம் என்றும் நாம் கூறுவோம். அப்படி வரக்கூடிய பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் அவர்களுடைய கோவிலுக்கு சென்று அவரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பான ஒன்று. அப்படி கோவிலுக்கு சென்று வழிபட இயலாதவர்கள் தங்களுடைய வீட்டிலேயே வழிபாடு செய்யலாம். இந்த மாதம் புதன்கிழமை அன்று வரக்கூடிய வளர்பிறை பிரதோஷ நாளன்று சிவபெருமானை எந்த முறையில் வழிபட்டால் சிவபெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு செய்ய வேண்டிய பிரதோஷ பூஜை
பிரதோஷ நேரம் என்பது மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வரும். அன்றைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி சுவாமி கும்பிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். தங்களுடைய உடல் நிலைக்கு ஏற்றவாறு முழு நேரமும் உபவாசம் இருக்கலாம். இயலாதவர்கள் பால் பழம் சாப்பிட்டு விட்டிருக்கலாம். அப்படியும் இருக்க முடியாது என்று நினைப்பவர்கள் ஒருவேளை மட்டுமோ அல்லது மூன்று வேளையுமோ எளிமையான உணவுகளை உட்கொண்டு விரதம் இருக்கலாம்.
எந்த முறையில் நாம் விரதம் இருந்தாலும் இந்த வழிபாட்டை நாம் செய்யும் பொழுது சிவபெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். வீட்டில் இருக்கக்கூடிய சிவலிங்கம் சிவன் சிலை என்று எதுவாக இருந்தாலும் பிரதோஷ நேரத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் அபிஷேக பொருட்களை வைத்து அபிஷேகம் செய்யலாம். எந்த பொருளையும் வைத்து அபிஷேகம் செய்ய இயலாது என்பவர்கள் கூட பன்னீரை வைத்து கண்டிப்பான முறையில் நாளைய தினம் அபிஷேகம் செய்ய வேண்டும்.
முடிந்த அளவிற்கு பிரதோஷ வேளையில் இந்த அபிஷேகத்தை செய்யுங்கள். அந்த நேரத்தில் உங்களால் இந்த அபிஷேகத்தை செய்ய முடியாது என்பவர்கள் ராகு காலம், எமகண்டம் இந்த நேரங்களை தவிர்த்து விட்டு மற்ற நேரத்தில் உங்களின் வசதிக்கேற்ப இந்த அபிஷேகத்தை செய்து வழிபாடு செய்யலாம்.
அடுத்ததாக சிவபெருமானுக்கு சுத்தமான நெய்யில் செய்யப்பட்ட ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இப்படி வைத்துவிட்டு அவருக்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். உதிரிப் பூக்களை எடுத்து வைத்துக்கொண்டு “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்னும் மந்திரத்தை 54 முறை மனம் உருகி சிவபெருமானை நினைத்து கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
வீட்டில் சிவலிங்கமோ, சிவன் விக்ரமோ இல்லை என்பவர்கள் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி, நெய்வேத்தியம் வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். ஆலயத்திற்கு சென்று வழிபாடு மேற்கொள்பவராக இருக்கும் பட்சத்தில் ஆலயத்திலேயே அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
மேலும் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக பன்னீரையும் வாங்கி கொடுக்க வேண்டும். எப்படி இருந்தாலும் பிரதோஷ நேரத்தில் இந்த மந்திரத்தை யார் ஒருவர் மனதார சிவபெருமானை நினைத்து கூறுகிறார்களோ அவர்களுக்கு சிவபெருமானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க வெற்றிலை மஞ்சள் பரிகாரம்
புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த பிரதோஷ நாளை தவறவிடாமல் இந்த முறையில் வழிபாடு செய்து சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.