ரோட்டு கடை ஸ்பெஷல் பிளைன் சால்னா இப்படி செஞ்சு பாருங்க. இதன் சுவைக்கு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அடிமையாகி விடுவார்கள்.

salna
- Advertisement -

விதவிதமாக சால்னாவை எப்படி வைத்து சாப்பிட்டாலும் இதன் சுவையே தனிதான். கல் தோசை, பரோட்டா, சப்பாத்திக்கு, தொட்டுக்கொள்ள சூப்பரான ஒரு சால்னா ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட இட்லிக்கும் இதன் சுவை அருமையாக இருக்கும். இட்லிக்கு சால்னா வைக்கும் போது கொஞ்சம் தண்ணீர் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள என்றால் கொஞ்சம் கெட்டியாக வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். வீதி கடைகளில் கிடைக்கும் சால்னா ரெசிபியை இப்போதே தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தேங்காய்த் துருவல் – 1/2 கப், பொட்டுக்கடலை – 1/4 கப், வர மிளகாய் – 2, கசகசா – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி இந்த விழுதை கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதாவது 90% இந்த விழுது அரைத்தால் போதும். பொட்டுக் கடலையை சேர்த்து மொழுமொழுவென அரைத்துவிட்டால், சால்னா கொழகொழப்பாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அரைத்த இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் மிதமான சூட்டில் காய வேண்டும். இதற்குள் சிறிய ஊரலில் பட்டை – 1 சிறிய துண்டு, கிராம்பு – 1, ஏலக்காய் – 1, இந்த மூன்று பொருட்களை போட்டு கொரகொரப்பாக இடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

எண்ணெயை மிதமான தீயில் காய்ந்ததும் இடித்த இந்த பொடியை எண்ணெயில் போட்டு, லேசாக வறுத்து, அதன் பின்பு கொஞ்சம் பெரியதாக நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் – 1, சேர்த்து வெங்காயத்தை கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன், புதினா இலைகள் – 10, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், மல்லித் தூள் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து பச்சை வாடை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கி விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, சேர்த்து தக்காளி பழம் வெந்து குழையும் வரை வதக்கி விட்டு 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, சால்னாவுக்கு தேவையான அளவு உப்பை போட்டு, கொதிக்க விடுங்கள். 2 நிமிடம் கொதித்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கடாயில் ஊற்றி, 2 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்டு இந்த சால்னாவை மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.

கொதிக்கும் போதே வாசத்தில் கண்டுபிடித்துவிடலாம். சால்னா தயாராகிவிட்டது என்பதை. சால்னாவை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு 2 நிமிடத்திற்கு முன்பு, 1/2 ஸ்பூன் கரம் மசாலா பொடியை தூவி கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி அப்படியே மணக்க மணக்க இந்த சால்னாவை ருசித்துப்பாருங்கள். இதன் வாசம் உங்கள் வீடு முழுவதும் நிரம்பி இருக்கும். பசி அப்படியே வயிற்றைக் கிள்ளி எடுக்கும். 4 இட்லி உள்ளே சேர்ந்து இறங்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -