பெண்கள் தலையில் பூ ஏன் வைக்கிறார்கள்? ஆன்மீக ரீதியாக நம் தமிழ் மரபில் பெண்கள் தலையில் பூவை சூடுவது வெறும் அழகு மட்டும் அல்ல; அது ஆன்மீகம் சார்ந்தும் முக்கியமானது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. பெண்கள் தலையில் பூ வைப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகளும், பெண்கள் ஏன் தலையில் பூ வைக்க வேண்டும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த காரணங்களையும் இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.
பெண்கள் தலையில் பூ வைப்பது மன சாந்தியை தரும். பூக்கள் எல்லாம் நல்ல வாசனையுடன் இருக்கும். அந்த வாசனை மனதிற்கு அமைதியைக் கொடுக்கும். கோபம் குறையும், மனதில் சந்தோஷம் வரும். குளிர்ச்சி பொருந்திய பூக்கள் தலையில் வைப்பதால் சக்தி மையம் தூண்டப்படுகிறது. நம் தலையில் சக்தி மையம் என்னும் அமைப்பு உள்ளது. அதனை “சஹஸ்ரார சக்ரா” என்று சொல்லப்படுகிறது.
இந்த உச்சந்தலையில் இருக்கும் மைய சக்ரத்தில் பூ வைப்பதால், அந்த இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் நம் எண்ணங்கள் நல்லவையாக இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் ஒழிந்து, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். சஹஸ்ரார சக்கரத்தில் மென்மையான இந்த பூவை வைப்பதால் வெறுப்பு, குரோதம், வன்மம், மாயை, ஆக்ரோஷம் போன்றவற்றிலிருந்து விலகி நிசப்தம் கிடைக்கும்.
பெண்கள் எந்த அளவிற்கு அதிகமாக தலையில் பூவை வைத்துக் கொள்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களிடம் செல்வமும், செல்வாக்கும் அதிகரிக்கும். துரதிர்ஷ்டம் நீங்கி அதிர்ஷ்ட ராசிக்காரர்களாக அவர்கள் மாறுவார்கள். பெண்கள் தலையில் அதிகம் பூ வைத்துக் கொள்வதால், அவர்களிடம் பணமும், ஐஸ்வர்யமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. பூ வாடுவதற்கு முன்னர் தலையிலிருந்து எடுக்கக் கூடாது. ஒருமுறை தலையில் வைத்த பூவை, மீண்டும் தலையில் இருந்து எடுக்கக் கூடாது. ஒருவர் தலையில் வைத்த பூவை மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது, இது மகா பாவமாகும். பூ புனிதம் மிக்கது மட்டுமல்ல, இறை சக்தியும் கொண்டுள்ளதால் அதனை குப்பையில் எறியாமல் செடி, கொடிகளில் போட்டு விடுங்கள் காய்ந்து சருகாகிவிடும்.
தெய்வங்களுக்கு பூக்கள் என்றாலே ரொம்பவும் பிடிக்கும். விஷ்ணு, சிவன், லட்சுமி, பராசக்தி என்று எல்லா தெய்வங்களும் பூவைக் விரும்புகிறார்கள். பெண்கள் தலையில் பூ வைத்தால், அது ஒரு தெய்வீக அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் தெய்வ அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பூக்களில் இறைத்தன்மை உண்டு. அனைத்து சுப காரியங்களுக்கும் பூக்கள் பயன்படுத்தப்படுகிறது. பூக்கள் இல்லாமல் பூஜைகள் நிறைவடைவதில்லை. இந்த பூக்களை பெண்கள் தலையில் வைப்பதால் பக்தி அதிகரிக்கும். இதனால் வாழ்க்கையில் நன்மைகள் அதிகம் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:
சோர்வான முகம் சூப்பராக மாற ஃபேஸ் பேக்
பூக்களை தினமும் தலையில் வைப்பது, உடல் நலமும், குடும்ப நலமும், பெண்ணின் கணவருக்கு தீர்காயுளும் கிடைக்கும் என நம் மூதாதையர்கள் நம்பினர். இது ஒரு நல்ல பழக்கமாக தொன்று தொட்டு பாரம்பரியத்தில் கடைபிடிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை போன்ற சில நாட்கள் பூ அணிவதற்கேற்ற நல்ல நாட்கள் என்று சாஸ்திரங்களில் சொல்லப்படுகிறது. பிறப்பு, இறப்பு, மாதவிடாய் போன்ற தீட்டு நாட்களில் மட்டும் பூ வைக்காமல் இருக்க சொல்வார்கள். அதுவும் மரபு வழியாக வந்தது. சுருக்கமாகச் சொன்னால், பெண்கள் பூவை வைப்பது, அழகு மட்டும் இல்லை, மன சாந்தியும், ஆன்மீக நன்மையும் தரும் ஒரு சாத்வீக பழக்கமாக இருக்கிறது.