பெரும்பாலும் பூஜை பாத்திரங்கள் பித்தளை, செம்பு அல்லது வெள்ளி போன்ற உலோகங்களால் செய்யப்பட்டதை நாம் பயன்படுத்தி வருகிறோம். இப்படிப்பட்ட உலோக பாத்திரங்களை நாம் கை வலிக்க தேய்த்து தான் சுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. அதிலும் எண்ணெய் பிசுக்குள்ள விளக்குகளை தேய்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பூஜை பாத்திரங்கள் அனைத்தையும் ஐந்தே நிமிடத்தில் மின்ன செய்வதற்கு ஒரு மேஜிக் பொருள் உண்டு. அது என்ன பொருள்? அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை தான் இந்த வீட்டுக்குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
தண்ணீரில் இந்த ஒரு பொருளை ஒரு ஸ்பூன் அளவிற்கு போட்டு தேய்க்க வேண்டிய பூஜை பாத்திரங்களை அதற்குள் ஐந்து நிமிடம் ஊற வைத்து எடுத்து தேய்த்தால், எல்லா பாத்திரங்களும் பளிச் பளிச்சுன்னு புதுசு மாதிரி ஆகுதாம். அது எப்படி? அது என்ன பொருள்? என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
சாதாரண சூப்பர் மார்க்கெட்டுகளில் விலை மலிவாக கிடைக்கக்கூடிய இந்த ஒரு பொருளின் பெயர் ‘லெமன் சால்ட்’ ஆகும். சிட்ரிக் ஆசிட் நிறைந்த இந்த லெமன் சால்ட் சில மளிகை கடைகளிலும் கிடைக்கப் பெறுகிறது. 100 கிராம் 60 ரூபாயிலிருந்து கிடைக்கும் இந்த லெமன் சால்ட், வாங்கி வைத்துக் கொண்டால் ஒரு ஸ்பூனில் மொத்த பூஜை பாத்திரங்களையும் ரொம்ப சுலபமாக கழுவி சுத்தம் செய்து கொள்ளலாம்.
உங்களிடம் இருக்கும் பூஜை பொருட்களில் முதலில் எண்ணெய் பிசுக்குகளை எல்லாம் டிஷ்யூ பேப்பர் அல்லது ஏதாவது ஒரு துணியை வைத்து துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள், குங்குமம் அனைத்தையும் ஈரத்துணியால் துடைத்து அகற்றி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு உங்கள் பூஜை பாத்திரங்கள் கொள்ளும் அளவிற்கு வாயகன்ற எவர்சில்வர் பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எவ்வளவு தண்ணீர் தேவையோ அந்த அளவிற்கு மட்டும் தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.
இரண்டு லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் ஒரு டீஸ்பூன் லெமன் சால்ட் சேர்த்தால் போதும். அதற்கு மேல் நீங்கள் தண்ணீர் ஊற்றும் அளவை பொறுத்து இதன் அளவையும் கூட குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் லெமன் சால்ட் சேர்த்த பின்பு, ஒரு ஸ்பூன் அளவிற்கு விம் லிக்விட் கொஞ்சம் போட்டுக் கொள்ளுங்கள். எந்த பாத்திரம் கழுவும் லிக்விடையும் நீங்கள் இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர் நீங்கள் சுத்தம் செய்ய வேண்டிய எல்லா பூஜை பாத்திரங்களையும் இதனுள் சேர்த்து நன்கு எல்லா இடங்களிலும் இந்த தண்ணீர் படும்படி கைகளால் தேய்த்து ஊற விட்டு விடுங்கள். ஐந்து நிமிடத்தில் பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களில் இருக்கக்கூடிய அழுக்குகள், பிசுப்புகள் அனைத்தும் நீங்கி விட்டிருக்கும்.
ஊற வைத்த பாத்திரத்தை நீங்கள் வெறும் கைகளால் லேசான அழுத்தம் கொடுத்து தேய்த்து கழுவினால் புதுசு மாதிரி பளபளன்னு மின்னும். விடாப்பிடியான அழுக்குகள் இருக்கும் இடங்களில் லேசாக அந்த தண்ணீரை தொட்டு ஸ்கிரப்பர் வைத்து தேய்த்தால் போதும் அவையும் எளிதாக நீங்கிவிடும். கொஞ்சம் கூட கை வலிக்காமல் எல்லா பாத்திரங்களையும் சுத்தம் செய்து கொடுக்கக்கூடிய இந்த லெமன் சால்ட் ஒரு மேஜிக் தான். அதே போல வெள்ளி பாத்திரங்களை சுத்தம் செய்ய ஒரு ஸ்பூன் கோல்கேட் பவுடர் அல்லது விபூதி போட்டு டிரை ஆக இருக்கும் பொழுது துணியை வைத்து அழுத்தி தேய்த்துக் கொடுத்தால் போதும், வெள்ளி பாத்திரங்கள் அனைத்தும் பளிச்சிடும்.