பூஜை அறையில் அனுதினமும் மாற்றிவிட வேண்டிய முக்கியமான 5 பொருட்கள் என்ன? இதை தினமும் மாற்றியே ஆக வேண்டுமா?

pooja-room-vilakku
- Advertisement -

பூஜை அறையில் இருக்கும் எல்லா பொருட்களையும் அதிகப்படியாக வைத்திருக்கக் கூடாது. குறைந்த நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் குறைந்த அளவில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மாதக்கணக்கில், வருடக்கணக்கில் மொத்தமாக வாங்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். பூஜை அறையில் வாரம் ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது உங்களால் முடிந்த பொழுது மொத்தமாக சுத்தம் செய்து பளிச்சிட வைக்க வேண்டும். ஆனால் அனுதினமும் மாற்ற வேண்டிய பொருட்களும் பூஜை அறையில் உண்டு! அது என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் காண இருக்கிறோம்.

கோலம்:
பூஜை அறையில் பூஜை செய்யும் முன்பு அதன் தரையைத் துடைத்து அங்கு கோலம் போட்டு இருக்க வேண்டும். கோலமாவு கொண்டு கோலம் போட்டாலும், சாக்பீஸில் கோலம் போட்டாலும் பரவாயில்லை! ஆனால் அழகிய மாக்கோலம் இட்டு அதன் பிறகு விளக்கு ஏற்றுவது தெய்வ கடாட்சம் அள்ளித் தரும். இதை தினமும் துடைத்து விட்டு மாற்றி விட வேண்டும் ஒருமுறை போட்டு ஒரு வாரத்திற்கு பயன்படுத்த கூடாது.

- Advertisement -

தீர்த்தம்:
பூஜைக்கு வைக்கப்படும் பஞ்ச பாத்திர தீர்த்தம் தினமும் மாற்றி விட வேண்டிய ஒரு முக்கியமான பொருளாகும். பலரும் இதை செய்வது கிடையாது. பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தீர்த்தம் ஆவியாகி மறுநாள் குறைந்துவிடும். இவ்வாறு குறைந்து போகும் அளவிற்கு அதனை விட்டு வைக்கக் கூடாது. பூஜை முடிந்ததும் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தீர்த்தத்தை கொடுத்து விடலாம்.

திரி:
விளக்கில் போடப்பட்டு இருக்கும் திரியை ஒரு முறை பயன்படுத்திய பிறகு மீண்டும் பயன்படுத்தக் கூடாது. தினமும் திரியை மாற்றி விட வேண்டும். காலையில் போட்ட திரியில், மாலையில் விளக்கு ஏற்றலாம்! ஆனால் மறுநாள் அதே திரியில் விளக்கு ஏற்றுவது தவறு. திரியை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு சாம்பிராணி தூபம் போடும் பொழுது திரிகளைப் போட்டு எரித்து விடலாம். இதனால் வீட்டில் தீய சக்திகள் நுழையாது.

- Advertisement -

நைவேத்தியம்:
பூஜை செய்யும் பொழுது சுவாமிக்கு வைக்கும் நைவேத்திய பொருட்களை கட்டாயம் பத்து, பதினைந்து நிமிடங்களில் எடுத்து விட வேண்டும். சாஸ்திரத்திற்கு நைவேத்திய பொருட்கள் வைக்கிறோம். பூஜை முடிந்து 15 நிமிடத்தில் நைவேத்திய பொருளை பூஜை அறையில் இருந்து எடுத்து குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடலாம். கல்கண்டு அல்லது பழங்கள் வைப்பவர்கள் அதை மறுநாள் மாற்றி விட வேண்டும், வாரக் கணக்கில் அப்படியே வைத்திருக்க கூடாது.

பூ:
சுவாமி படங்களுக்கு சார்த்தப்படும் பூக்கள், மலர் மாலைகள் ஆகியவற்றை வாடும் வரை அப்படியே விட்டு விடக் கூடாது. ஒரு நாளுக்கு மேல் பூக்கள் நறுமணத்தையும், மலர்ச்சியையும் கொடுப்பது இல்லை. துளசி, வில்வம் போன்றவற்றை தவிர பூஜையில் வைக்கப்படும் பூக்களை மறுநாள் மாற்றி விட வேண்டும். சாமிக்கு சாற்றப்படும் வாடிய பொருட்களை நிர்மால்யம் என்று கூறுவார்கள். இந்த பொருட்களை அவமதிப்பது கூடாது. தீப திரி, பூக்கள், வெற்றிலை, எலுமிச்சை போன்ற நிர்மால்ய பொருட்களை யாருடைய காலிலும் படாதபடி முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அதை குப்பையில் எரிவது, கண்ட இடங்களில் போட்டு வைப்பது என்பது கூடாது. அவ்வப்போது அதை முறையாக அகற்றி சுத்தம் செய்து விட வேண்டும்.

- Advertisement -