நம்முடைய முன்னோர்கள் பிறந்து இருந்து வாழ்ந்த இடம், வீடு போன்றவற்றை தான் பூர்வீக சொத்து என்று கூறுவோம். இந்த பூர்வீக சொத்து கிடைப்பது என்பது நம்முடைய முன்னோர்களின் அருள் கிடைப்பதற்கு சமமான ஒன்றாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பூர்வீக இடமோ வீடோ நம் கைவசம் வந்து சேர வேண்டும் என்று நினைப்பவர்களும், அது கைவசம் சேராமல் ஏதாவது பிரச்சனையை ஏற்பட்டு இருப்பின் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம். அந்த முயற்சிகளோடு இந்த ஒரு தீபத்தையும் நாம் ஏற்ற விரைவிலேயே பூர்வீக சொத்து கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் உண்டாகும். அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பூர்வீக சொத்து கிடைக்க பரிகாரம்
பலரும் தங்களுடைய பூர்வீக சொத்து தங்களுக்கே வந்து சேர வேண்டும் என்று கூறுவார்கள். அந்த பூர்வீக சொத்தை ஏமாற்றி வாங்கி விட வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி தங்களுக்கு வந்து சேர வேண்டிய நியாயமான பூர்வீக சொத்து தங்களிடமே வந்து சேர்வதற்கும், தங்கள் கையை விட்டு போகாமல் இருப்பதற்கும், அந்த பூர்வீக சொத்தில் ஏதேனும் கோர்ட்டு கேஸ் போன்ற பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் அந்த பிரச்சினைகள் நீங்குவதற்கும் செய்ய வேண்டிய ஒரு எளிமையான தீப பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு சில பொருட்கள் தேவைப்படும். முதலில் சரிசமமான அளவு தேங்காய் எண்ணெயையும் நெய்யையும் வாங்கி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு பஞ்சு திரியை தான் பயன்படுத்த வேண்டும். மூன்று தீபங்கள் ஏற்ற வேண்டும் என்பதால் இந்த தீபத்தை ஏற்றுவதற்கு மூன்று அகல் விளக்குகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக வாழைப்பூவின் மடல்களை மூன்று என்ற எண்ணிக்கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் ஏதாவது ஒரு சிவாலயத்தில் இருக்கக்கூடிய வில்வ மரத்திலிருந்து இரண்டு காய்களை எடுத்து வந்து அதை சரிசமமாக நறுக்கி அதற்குள் இருக்கக்கூடிய பகுதிகளை நீக்கி அதன் ஓட்டை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக நாட்டு மருந்து கடையில் மங்குமிலி என்று கிடைக்கும். அதை 150 கிராம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது நம்முடைய வீட்டு பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். முதலில் வாழைப்பூ மடலை வைக்க வேண்டும். அதன் நுனிப்பகுதி கிழக்கு பார்த்தவாறு இருக்கட்டும். பிறகு அந்த மூன்று வாழைப்பூ மடல்களிலும் நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிய மங்குமிலியை 50 கிராம் வீதம் மூன்றிலும் போட்டு விடுங்கள். அதற்கு மேல் நம் தயார் செய்து வைத்திருக்கும் வில்வ ஓட்டை வைக்க வேண்டும். அந்த வில்வ ஓட்டிற்குள் சிறிதளவு கல் உப்பை முதலில் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதற்கு மேல் நெல்லை போட்டு சரிசமமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து நாம் ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் நெய் தேங்காய் எண்ணெயை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக எரிய வேண்டும். இந்த தீபத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றினால் தான் முழு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் பூர்வீக சொத்து கிடைப்பதில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும்.
இதையும் படிக்கலாமே: திருமணத்தில் இருக்கும் தடைகள் விலக
முழு நம்பிக்கையோடு பூர்வீக சொத்து கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் நினைத்து இந்த முறையில் தீபம் ஏற்றுபவர்களுக்கு விரைவிலேயே அவர்களுடைய பூர்வீக சொத்து கிடைப்பதில் இருக்கக்கூடிய தடைகள் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.