தோசை மாவு இல்லையா? ரவையும், பொரியும் இருந்தா போதும் இன்ஸ்டன்ட் தோசை மாவு சுலபமாக தயாரித்து விடலாமே!

pori-ravai-dosai
- Advertisement -

நம் வீட்டில் பலரும் காலையில் எழுந்த உடனேயே இட்லி மாவு அல்லது தோசை மாவு இருக்கிறதா? என்று தான் பார்ப்போம். எல்லா சமயங்களிலும் தோசை மாவு நம்மிடம் இருக்கும் என்று கூறி விட முடியாது. இன்ஸ்டன்ட் ஆக வித்தியாசமான சுவையை கொடுக்கக் கூடிய தோசையை சுலபமாக செய்வதற்கு நம்மிடம் ரவை மற்றும் பொரி இருந்தாலே போதும்! சுவையான பொரி தோசை மாவு எப்படி செய்வது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

pori

தோசை மாவு செய்ய தேவையான பொருட்கள்:
பொரி – 3 கப், ரவை – ஒரு கப், உப்பு – தேவையான அளவு, சர்க்கரை – ஒரு ஸ்பூன், ஆப்ப சோடா – 2 சிட்டிகை, பச்சரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

தோசை மாவு செய்முறை விளக்கம்:
முதலில் மூன்று கப் அளவிற்கு அரிசி பொரியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது ஊற வேண்டும். அதே போல இன்னொரு பௌலில் ஒரு கப் அளவிற்கு ரவையை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். ரவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். 15 நிமிடம் கழித்து ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஊற வைத்த பொரியை நன்கு தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

ravai

பின்னர் ஊற வைத்துள்ள ரவையையும் சேர்த்து கொள்ளுங்கள். ரவை கொஞ்ச நேரத்திலேயே முழு தண்ணீரையும் உரிந்து வைத்திருக்கும். இப்போது மிக்ஸியை இயக்கி எவ்வளவு முடியுமோ அவ்வளவு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். இப்போது ஜாரை கழுவிய தண்ணீரைச் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் பச்சரிசி மாவு சேர்த்து கலந்து விட வேண்டும். தோசை முறுகலாக பொன்னிறமாக வருவதற்கு ஆப்ப சோடா சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். ஆப்ப சோடா சேர்க்க விரும்பாதவர்கள், ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் இந்த மாவை நன்கு கலந்து விட்ட பின்பு குறைந்தது அரை மணி நேரமாவது நன்கு ஊற விட்டு விடுங்கள். அப்போது தான் மாவு கொஞ்சமாவது புளித்து இருக்கும். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தோசைக்கல்லை வையுங்கள்.

vendhaya-dosai3

தோசைக் கல் சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை போல சுற்றி விடுங்கள். சுற்றிலும் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டால் ரொம்பவே அருமையாக இருக்கும். பொரி சேர்ந்துள்ளதால் சுவையும் சூப்பராக இருக்கும். பொன்னிறமாக தோசை வார்த்ததும், திருப்பி போட்டு வேக வைக்க வேண்டியது தான். ரொம்பவே சுலபமாக செய்யக் கூடிய இந்த இன்ஸ்டன்ட் பொரி தோசை மாவு நீங்களும் ஒருமுறை இதே போல செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். தோசை மாவு, இட்லி மாவு இல்லாத சமயங்களில் நாம் காலையிலேயே இது போல் செய்து வைத்து விட்டால் இன்ஸ்டன்ட் சுவை மிகுந்த ஒரு தோசை சுட்டு சாப்பிட்டு மகிழலாம்.

- Advertisement -