வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு ஃப்ரை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க!

potato-fry
- Advertisement -

உருளைக்கிழங்கு என்றாலே எல்லோருக்கும் பிடித்த ஒரு கிழங்கு வகை. உருளைக்கிழங்கை வைத்து நம்முடைய வீட்டில் எந்த டிஷ் செய்தாலும் கட்டாயம் அது சுவையாகத்தான் இருக்கும். சாதத்திற்கு தொட்டுக்கொள்ள ஒரு உருளைக்கிழங்கு ஃப்ரை ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யப்போகிறோம். அதேசமயம் ரொம்ப ரொம்ப டேஸ்டியா செய்யப் போறோம். ரெசிபியை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

potato-fry3

முதலில் 3 மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி கொஞ்சமாக உப்பு போட்டு, 2 விசில் விட்டு வேக வைத்து, தோல் உரித்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள் இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். 3 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், தாளித்துக் கொள்ளுங்கள். இந்த சோம்பும் சீரகமும் நன்றாக எண்ணெயில் பொரிந்ததும் 6 பல் தோல் உரித்த பூண்டைனை நன்றாக நசுக்கி எண்ணெயில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

potato-fry2

பூண்டு எண்ணெயின் ஒரு நிமிடம் வதக்கியவுடன், பெரிய சைஸ் வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியதை எண்ணெயில் சேர்த்து, ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து, வெங்காயம் சுருண்டு வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/3 ஸ்பூன், மல்லித் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு இந்த மசாலா பொருட்களை வெங்காயத்துடன் சேர்த்து 1 நிமிடம் வதக்கவேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, மசாலா பொருட்களை ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக வேக வைத்து நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்குகளை இந்த மசாலாவில் கொட்டி, கரண்டியை வைத்து நன்றாக கலந்து கொடுக்க வேண்டும். மசாலா பொருட்கள் அனைத்தும் உருளைக்கிழங்கில் ஒட்டிக்கொள்ளும். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். ஒரு மூடியை போட்டு இந்த உருளைக்கிழங்கு மசாலாவை அப்படியே வேகவிடுங்கள். (அப்போதுதான் உப்பு காரம் நன்றாக வேக வைத்த உருளைக்கிழங்குக்குள் இறங்கும்.)

potato-fry2

5 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து விட்டு, கடாயில் இருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை நன்றாக சுருண்டு சிவக்கும்படி வதக்கி விட வேண்டும். இருதியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளைத் தூவி, சுடச்சுட பரிமாறினால் அட்டகாசமான உருளைக்கிழங்கு ஃப்ரை தயார்.

potato-fry4

இதை ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், எதற்கு வேண்டுமென்றாலும் சைட் டிஷ்ஷாக கொடுக்கலாம்‌. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -