பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்கள் சந்திர பகவானுக்கு உரிய நாட்களாகவும் பலவிதமான வழிபாடுகளையும், பரிகாரங்களையும் செய்வதற்கு உரிய நாட்கள் ஆகவும் கருதப்படுகிறது. அதிலும் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர்வதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. இவற்றை நாம் முழுமனதோடு மேற்கொள்ளும் பொழுது சந்திர பகவானின் அருளால் நம்முடைய செல்வ செழிப்பு உயரும் என்றே கூறலாம். அந்த வகையில் ஒரு ரூபாயை வைத்து செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட பணத்திற்குரிய அதி தேவதையாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரின் சகோதரராக திகழக்கூடியவர்தான் சந்திர பகவான் என்று புராணங்கள் கூறுகின்றன. எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் சிறப்பான முடிவை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு சந்திரனின் அருள் என்பது வேண்டும். சிறப்பான முடிவை நாம் எடுத்து விட்டோம் என்றால் நமக்கு எந்தவித தோல்வியுமே ஏற்படாது. அதன் மூலம் மகாலட்சுமி அருளால் பணவரவும் உண்டாகும். அதனால் பௌர்ணமி, அமாவாசை நாட்களை நாம் தன ஆகர்ஷன நாட்களாகவே பாவிக்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை நாம் இரவு 10 மணியிலிருந்து 12 மணிக்குள் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக 10 மணியிலிருந்து 11 மணிக்குள் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இதற்கு நமக்கு ஒரே ஒரு தீபம், ஒரு ரூபாய் நாணயம், ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீர் வேண்டும். சந்திரனின் வெளிச்சம் படும் இடத்தில் அமர்ந்து கொண்டு செய்யும் பொழுது இதற்கு பலன் அதிகமாக இருக்கும். அப்படி செய்ய முடியாது என்பவர்கள் வீட்டிற்குள்ளேயும் அமர்ந்து கொண்டு செய்யலாம்.
தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு முன்பாக கண்ணாடி டம்ளரில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். வலது கையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக் கொண்டு முக்கியமான மூன்று வேண்டுதல்கள் நிறைவேறி விட்டதாக மனதிற்குள் கற்பனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி கற்பனை செய்து முடித்த பிறகு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து நம்முடைய நெஞ்சுக்குழியில் வைத்து திரும்பவும் அந்த வேண்டுதல்கள் நிறைவேறி விட்டதாக முழு மனதோடு நினைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நினைத்து முடித்த பிறகு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை கையில் வைத்து கொண்டே எழுந்து எட்டு அடி முன்னோக்கி வைக்க வேண்டும்.
அப்படி ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் பொழுது “ஓம் நித்யாய நமஹ” என்னும் மந்திரத்தை கூற வேண்டும். எட்டு அடி எடுத்து வைத்த பிறகு கையில் இருக்கக்கூடிய அந்த நாணயத்தை மனதார மகாலட்சுமி ஆக பாவித்து கண்களில் ஒத்திக்கொண்டு டம்ளரில் இருக்கக்கூடிய தண்ணீரில் போட்டு விட வேண்டும். இது இரவு முழுவதும் சந்திர வெளிச்சத்தில் இருந்தால் மிகவும் சிறப்பு. ஒருவேளை சந்திர வெளிச்சத்தில் வைக்க முடியாது என்பவர்கள் அந்தத் தண்ணீரை வீட்டிற்குள் எடுத்து வந்து அதை வீட்டின் அனைத்து மூலைகளிலும் தெளித்து விட வேண்டும்.
சிறிதளவு மட்டும் தண்ணீரை மீதம் வைத்துக்கொண்டு அதில் அந்த நாணயத்தை போட்டு பூஜையறையில் வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் குளிக்கும் பொழுது அந்த நாணயத்தையும் தண்ணீரையும் குளிக்கின்ற தண்ணீரில் போட்டுவிட்டு குளிக்க வேண்டும். குளித்து முடித்த பிறகு அந்த நாணயத்தை மறுபடியும் டம்ளர் தண்ணீரை போட்டு வைத்து விட வேண்டும் தினமும் குளிக்கும் தண்ணீரில் அந்த தண்ணீரையும் நாணயத்தையும் ஊற்றி குளிப்பதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான தரித்திரமும் நீங்கி தன ஆகர்ஷணம் ஏற்படும்.
இதையும் படிக்கலாமே: பௌர்ணமி பரிகாரம்
இந்த முறையில் பௌர்ணமி நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரமானது நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான தரித்திரத்தையும் நீக்கி தன ஆகர்ஷணத்தை ஏற்படுத்துவதோடு வேண்டிய வரத்தையும் நிறைவேற்றும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.