நீண்ட நாட்களாக புடவையை எடுத்து பயன்படுத்தாமல், கட்டாமல் பீரோவில் மடித்து, அடுக்கி வைத்திருந்தால் அந்த புடவையிலிருந்து ஒரு மாதிரியான துர்நாற்றம் வீசும். ஒரு நாள் அந்த புடவையை எடுத்து உடுத்தும் போது, நம் பக்கத்தில் இருப்பவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். இந்த புடவையை இவர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது தான் கட்டி இருக்கிறார்கள் என்று. அந்த அளவுக்கு இந்த வாசம் அப்பட்டமாக வெளியே தெரியும். புதுசாக வாங்கும் போது புடவையில் ஒரு நல்ல நறுமணம் வீசும் அல்லவா. அந்த வாசம் அப்படியே புடவையில் மெயின்டெனாக வேண்டும் என்றால் என்ன செய்வது. அதற்கான ஒரு குறிப்பையும், கூடவே சேர்த்து காட்டன் புடவைகளை மொறுமொறுப்பாக அப்படியே ஸ்டிப்பாக மெயின்டைன் செய்ய ஒரு வீட்டு குறிப்பையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பீரோவில் அடுக்கி வைத்த புடவைகள் எப்போதும் வாசமாக இருக்க:
ஒரு சிறிய கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் தூள் 1 டேபிள் ஸ்பூன், பேக்கிங் சோடா 1/2 ஸ்பூன், கம்ஃபோர்ட் 1/2 மூடி, ஊற்றி இதை சப்பாத்தி மாவு போல பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை மெல்லிசான காட்டன் துணியில் அல்லது டிஷ்யூ பேப்பரிலோ வைத்து ஒரு ரப்பர் மேன் போட்டு சிறிய கிண்ணத்தில் வைத்து பீரோவில் ஆங்காங்கே வைத்து விட்டால் போதும்.
பீரோவில் அடுக்கி வைத்த துணிகள் புடவைகள் அனைத்தும் நல்ல வாசமாக இருக்கும். பீரோவில் இருக்கும் துணி துர்நாற்றம் வீசாது. முயற்சி செய்து பாருங்கள். மேலே சொன்ன அளவுகளில் நமக்கு ஐந்திலிருந்து ஆறு உருண்டைகள் கிடைக்கும். உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் உருண்டைகள் தேவை என்றால் கூடுதலான பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.
காட்டன் புடவைகளை எப்போதும் ஸ்டிஃப்பாக வைத்துக் கொள்ள குறிப்பு:
எப்போதுமே காட்டன் புடவைகள் வாங்கிய புதுசில் மொறுமொறுப்பாக கட்டுவதற்கு வசதியாக இருக்கும். ஒருமுறை அந்த புடவையை தண்ணீரில் நனைத்து விட்டால், அதில் இருக்கும் கஞ்சி நீங்கி புடவை ஸ்டிஃப்பாக இருக்காது. எப்போதும் காட்டன் புடவைகளை மொறுமொறுப்பாக வைக்க என்ன செய்வது.
ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஜவ்வரிசி 4 டேபிள் ஸ்பூன், போட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொழகொழப்பாக வந்தவுடன் இதை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய அந்த ஜவ்வரிசி லிக்யூடை நன்றாக ஆறவைத்து ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் கெட்டுப் போகாது. (இது வெள்ளையாக கஞ்சி பதத்தில் கொஞ்சம் கொழ கொழப்பாக கட்டியாக இருக்கும்.) இந்த பசையை எப்படி பயன்படுத்துவது.
ஒரு பக்கெட்டில் 3 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 3 ஸ்பூன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் ஜவ்வரிசி பசையை ஊற்றி கலக்கவும். இந்த தண்ணீரில் காட்டன் புடவையை நனைத்து பத்து நிமிடங்கள் ஊறவைத்து அதன் பின்பு நிழலிலேயே காய வைத்து அயன் செய்தால் பழைய காட்டன் புடவை கூட புது காட்டன் புடவை போல மொறுமொறுப்பாக மாறிவிடும்.