பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த நாளாக தான் பௌர்ணமி திகழ்கிறது. பௌர்ணமி நாளில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டிற்கு அதிக அளவில் பலன் கிடைக்கும் என்றும், நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. பௌர்ணமி நாளில் பலரும் பலவிதமான தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு, சிவ வழிபாடு, சந்திர வழிபாடு, நாராயணர் வழிபாடு என்று பலவிதமான தெய்வங்களுக்கு உகந்த நாளாக பௌர்ணமி தினம் திகழ்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பௌர்ணமி நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய கர்ம வினைகளை நீக்கி புண்ணியத்தை சேர்க்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆவணி பௌர்ணமி பரிகாரம்
ஆவணி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி என்பது செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முழுவதுமே பௌர்ணமி திதி இருக்கிறது. பௌர்ணமி திதி என்பது ஞாயிற்றுக்கிழமை இரவு 12:32 மணி வரை இருக்கிறது. மேலும் அன்றைய தினம் சந்திர கிரகணமாகவும் திகழ்கிறது என்பதால் இந்த பௌர்ணமிக்கு கூடுதல் சிறப்புகள் உள்ளது. பொதுவாகவே பௌர்ணமி தினத்தில் முழு நிலவைப் பார்த்து பலவிதமான வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்வதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்றும் கேள்விப்பட்டிருப்போம். அதே பௌர்ணமி நாளில் தான் நம்முடைய பாவ கணக்கையும் கர்ம வினைகளையும் குறைப்பதற்குரிய பரிகாரத்தையும் நாம் செய்ய வேண்டும்.
பொதுவாகவே பௌர்ணமி தினத்தில் மாலை நேரத்தில் நிலவு வானத்தில் வந்த பிறகு செய்யக்கூடிய வழிபாட்டிற்கும் பரிகாரத்திற்குமே அதிக அளவு பலன் கிடைக்கும். அதனால் மாலை 6 மணிக்கு வீட்டில் தீபம் ஏற்றி தங்களுக்கு தெரிந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இதோடு இந்த பரிகாரத்தையும் சேர்த்து செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு ஏதாவது ஒரு இலை ஒன்று வேண்டும். வெற்றிலை, செம்பருத்தி இலை, வாழை இலை, மா இலை, அரச இலை போன்ற ஏதாவது ஒரு இலையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இலையை சுத்தம் செய்து வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். அந்த இலைக்கு மேல் ஒரு கட்டி வெல்லத்தை வைக்க வேண்டும்.
பௌர்ணமி வழிபாட்டை பூஜை அறையில் நிறைவு செய்வதற்கு முன் இந்த வெல்லத்தை இலையோடு சேர்த்து எடுத்து எந்த இடத்தில் சந்திர பகவான் தெளிவாகத் தெரிகிறாரோ அந்த இடத்திற்கு சென்று அவருக்கு நெய்வேத்தியம் காட்டுவது போல் காட்டி “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை மூன்று முறை கூற வேண்டும். பிறகு திரும்பவும் இந்த வெல்லத்தை எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து விட்டு உங்களுடைய வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். தீபம் எரியும் வரை இந்த வெல்லம் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும்.
தீபத்தை குளிர வைக்கும் பொழுது இந்த வெள்ளத்தை இலையுடன் சேர்த்து எடுத்து வந்து தங்களுடைய வீட்டு நிலை வாசலுக்கு வெளியே வைக்க வேண்டும். இரவு முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் வாசலை சுத்தம் செய்யும் பொழுது இதை எடுத்து ஓரமாக கால் படாத இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி இரவு முழுவதும் வெல்லம் நிலை வாசலில் இருப்பதன் மூலம் அந்த வெல்லத்தை உண்பதற்காக எறும்புகள் நம் வீடு தேடி வரும். வெல்லத்தையும் சேகரித்துச் செல்லும். இப்படி பௌர்ணமி நாளில் எறும்புகளுக்கு நாம் தானம் செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் படிப்படியாக குறைவதோடு நமக்கு புண்ணியங்களும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: நினைத்த கோரிக்கையை நிறைவேற்றும் தீபம்
தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னதானம் என்பது மனிதர்களுக்கு மட்டும் செய்யக் கூடியது அல்ல. உயிருள்ள எந்த ஜீவனுக்கு வேண்டுமானாலும் வயிறு நிறைய உணவு தருவது அன்னதானம். அந்த வகையில் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்து நம்முடைய கர்ம வினைகளை குறைத்துக் கொள்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.