புரட்டாசி மாதமே பெருமாளுக்கு உரிய மாதம் என்றாலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை பலரும் வைத்திருப்பார்கள். அப்படி பெருமாளை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்யக்கூடிய ஒரு சனிக்கிழமையாக தான் புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை திகழ்கிறது, அன்றைய நாளில் சிவபெருமானுக்குரிய பிரதோஷமும் சேர்ந்து வருவதால் அன்றைய தினம் சிவபெருமானையும் பெருமாளையும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அதோடு நரசிம்மரையும் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்துமே தீரும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை
சாதாரணமாக வரக்கூடிய பிரதோஷ நாளில் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். பலரும் அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பிரதோஷம் சனிக்கிழமையோடு சேர்ந்து வருவது என்பது அதீத பலனை தரக்கூடியது. சனிப்பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்வது என்பது பல மடங்கு பலனை நமக்கு தரும். அப்படி இருக்கும் பட்சத்தில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமையில் சனி மகா பிரதோஷம் வருவது என்பது சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் வழிபாடு செய்வதற்குரிய நாளாக கருதப்படுகிறது.
பொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை அன்று தளிறு போட்டு வழிபாடு செய்பவர்கள். ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரக்கூடிய சனிக்கிழமையில் தான் வழிபாட்டை செய்வார்கள். அதாவது முதல் வாரம், மூன்றாம் வாரம், ஐந்தாம் வாரம் என்ற கணக்கில் தான் வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் புரட்டாசி மாதத்தின் மூன்றாவது வாரமாக கருதக்கூடிய அக்டோபர் மாதம் நான்காம் தேதி சனி மகா பிரதோஷமும் சேர்ந்து வருகிறது. அன்றைய தினம் நாம் பெருமாளையும் சிவபெருமானையும் வழிபாடு செய்வதோடு நரசிம்மரையும் சேர்த்து வழிபாடு செய்ய வேண்டும்.
பெருமாளுக்கு நாம் என்னென்ன பொருட்களை வைத்து படையல் இட்டு வழிபாடு செய்கிறோமோ அதோடு ஒரு பாணகத்தையும் தயார் செய்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் பெருமாளுக்கு 108 போற்றிகளை கூறி அர்ச்சனை செய்யும் பொழுது “ஓம் நமோ நரசிம்மரே நமோ நமஹ” என்னும் மந்திரத்தையும் 108 முறை கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த மந்திரத்தை மனதிற்குள் கூறாமல் சற்று சத்தமாக பிறர் கேட்கும் அளவிற்கு கூற வேண்டும். அப்பொழுதுதான் அதன் அதிர்வலைகளால் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் விலகிச் செல்லும்.
பெரும்பாலும் சனி மகா பிரதோஷ நாளன்று பிரதோஷ நிறமான நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் சிவாலயத்திற்கு சென்று வழிபாடும் செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். ஆனால் அன்றைய தினம் சிவபெருமானை வழிபாடு செய்வதோடு நரசிம்மர் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று அவரை வழிபாடு செய்து அவரிடமிருந்து பெறப்பட்ட தீர்த்தத்தை பருகுவதன் மூலம் நம்மிடமும் நம் வீட்டிலும் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்குவதோடு கஷ்டங்களும் விலகும்.
இதையும் படிக்கலாமே: தொழில் முடக்கம் நீங்கி முன்னேற்றம் உண்டாக
மிகவும் சிறப்பு மிகுந்த இந்த புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மறவாமல் நரசிம்மரை வழிபாடு செய்பவர்களுக்கு சகல விதமான கஷ்டங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.