பௌர்ணமி என்றதும் சித்ரா பௌர்ணமி மிகவும் சிறப்பு மிகுந்தது என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அதே அளவிற்கு தான் புரட்டாசி பௌர்ணமியும் மிகவும் சிறப்பு வாய்ந்த பௌர்ணமியாக திகழ்கிறது. இந்த பௌர்ணமி தினத்தில் நாம் சிவன், அம்பாள், பெருமாள், குலதெய்வம் போன்றவர்களை வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் அனைத்து விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி பௌர்ணமி வழிபாடு
புரட்டாசி பௌர்ணமி என்பது அக்டோபர் மாதம் 16ஆம் தேதி இரவு 7 மணி 57 நிமிடத்திற்கு ஆரம்பித்து அக்டோபர் மாதம் 17ஆம் தேதி மாலை 5 மணி 30 நிமிடத்திற்கு நிறைவடைகிறது. கிரிவலம் செல்பவர்களாக இருக்கும் பட்சத்தில் 16ஆம் தேதி இரவு செல்வது என்பது மிகவும் சிறப்பு. அவ்வாறு செல்லும் பொழுது வில்வ இலைகளை கையில் வைத்துக்கொண்டு கிரிவலம் மேற்கொள்ள வேண்டும். பிறகு இந்த வில்வ இலைகளை எடுத்து வந்து பணம் வைக்கும் பீரோவில் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு சேர்த்து நாம் சிவன் அம்பாள் பெருமாள் மற்றும் குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டோம் என்றால் நம் வாழ்வில் அனைத்து விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தெய்வங்களில் ஏதாவது ஒரு தெய்வ வழிபாட்டையாவது புரட்டாசி பௌர்ணமி தினத்தில் நாம் மேற்கொள்வது நல்ல பலனை தரும்.
சிவபெருமானை வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி மூன்று வேளையும் வழிபாடு செய்ய வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்திலும் மதியமும் மாலை நேரத்திலும் வழிபாடு செய்ய வேண்டும். சிவலிங்கம் இருக்கும் பட்சத்தில் அந்த சிவலிங்கத்திற்கு பால், பன்னீர், விபூதி அபிஷேகம் செய்யலாம். மூன்று வேளையும் செய்யலாம் அல்லது ஒருமுறை மட்டுமாவது செய்யலாம். சிவபெருமானுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு “ஓம் சிவ சிவ சிவாய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மதியம் 12:15 இல் இருந்து 1:15க்குள் மறுபடியும் இதே முறையில் வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள்ளும் இதே வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் நெய்வேத்தியத்தை மட்டும் மாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாளை வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது அம்பாளுக்கு பால் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அம்பாளுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அம்பாளை முழு மனதோடு வழிபாடு செய்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி முடித்துவிட்டு “ஓம் சக்தி” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
பெருமாளை வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் காலையிலும் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அவ்வாறு செய்ய இயலவில்லை என்பவர்கள் 7:30 மணியிலிருந்து 11:45 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம். மாலை நேரத்தில் 5 மணியிலிருந்து 6 மணிக்குள் செய்து விட வேண்டும். பெருமாளுக்கு முன்பாக நல்லெண்ணெய் தீபம் அல்லது நெய் தீபத்தை ஏற்றி வைத்து பெருமாளுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு “ஓம் நமோ நாராயணாய” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
குலதெய்வத்தை வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் வழிபாடு செய்ய வேண்டும். அருகில் குலதெய்வத்தின் ஆலயம் இருக்கும் பட்சத்தில் அந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அவ்வாறு அருகில் குலதெய்வ ஆலயம் இல்லாத பட்சத்தில் வீட்டிலேயே இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். குலதெய்வத்தின் படத்திற்கு முன்பாக நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பசும்பாலை காய்ச்சி அதில் கற்கண்டு போட்டு குலதெய்வத்திற்கு நெய்வேத்தியமாக வைத்துவிட்டு “ஓம் குலதெய்வமே வசி வசி” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதன் மூலம் குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும்.
இந்த வழிபாட்டில் எந்த வழிபாட்டையும் என்னால் செய்ய இயலவில்லை என்பவர்கள் அருகில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு வில்வ இலைகளை வாங்கி தருவதன் மூலம் இந்த வழிபாட்டிற்குரிய பலனை முழுமையாக பெற முடியும். ஆலயத்திற்கு செல்ல இயலாது தீட்டுத்தடை இருக்கிறது என்று நினைப்பவர்கள் அன்றைய தினம் பசுமாட்டிற்கு தங்களால் இயன்ற உணவுகளை தானமாக தரவேண்டும். அதேபோல் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலும் மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் வடக்கு பார்த்து அமர்ந்து பத்து நிமிடம் தியானம் செய்வதன் மூலமும் இந்த பலனை பெற முடியும். அதே போல் சந்திர தரிசனம் செய்வதும் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. சந்திர தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி இரவே செய்து விட வேண்டும். அதுதான் முழு பௌர்ணமி சந்திர தரிசனம் ஆகும்.
இதையும் படிக்கலாமே:சகல நன்மைகள் உண்டாக பரிகாரம்
இந்த எளிமையான வழிபாட்டு முறைகளில் தங்களால் எந்த வழிபாட்டை செய்ய முடியுமோ அந்த வழிபாட்டை செய்து சகல சௌபாக்கியங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.