விசேஷகரமான நாட்கள் என்று பல நாட்கள் இருக்கின்றன. ஒரு சில நாட்கள் வழிபாட்டிற்கு உரிய நாட்களாக கருதப்படும். ஒரு சில நாட்கள் முன்னோர்களுக்குரிய வழிபாட்டை செய்யக்கூடிய நாட்களாக திகழும். ஒரு சில நாட்கள் கடன் அடைவதற்குரிய நாட்களாக திகழும். ஒரு சில நாட்கள் வாஸ்து செய்வதற்குரிய நாட்களாக திகழும். இப்படி நாம் கூறிக் கொண்டே செல்லலாம். இப்படிப்பட்ட நாட்களில் சில காரியங்களை செய்ய வேண்டும் என்றும் சில காரியங்களை தவிர்க்க வேண்டும் என்றும் கூறுவோம். அப்படிப்பட்ட விசேஷமான நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை. ஒவ்வொரு புரட்டாசி மாத சனிக்கிழமை நாம் இந்த செயலை மறந்தும் கூட செய்யக்கூடாது. அந்த செயல்கள் என்ன என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி சனிக்கிழமை செய்யக்கூடாத செயல்கள்
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உரிய மாதமாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை என்பது பெருமாளை வழிபடுவதற்குரிய உகந்த தினமாக கருதப்படுகிறது. அன்று பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதி. இப்படி நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் செல்வ வளம் என்பது அதிகரிக்கும். மேலும் புரட்டாசி சனிக்கிழமை தோறும் பெருமாளை விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும், விரதம் இல்லாமல் வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும், ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும், வீட்டிலேயே வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் கோவிந்தா நாமத்தை கூற வேண்டும்.
அப்படி கூறினோம் என்றால் சனி பகவானின் ஆதிக்கத்தில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும். சனிபகவானின் கருணை பார்வை நம் மீது விழ ஆரம்பிக்கும். அப்படி அவ்வளவு சிறப்பு மிகுந்த புரட்டாசி சனிக்கிழமை அன்று சில செயல்களை நாம் செய்யவே கூடாது. அப்படி செய்வதன் மூலம் நமக்கு வறுமை ஏற்படும். கஷ்டம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த செயல்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மறந்தும் கூட புரட்டாசி சனிக்கிழமை அன்று யாருக்கும் கடன் தரக் கூடாது. அப்படி நாம் கடன் கொடுத்தோம் என்றால் அந்த பணம் திரும்ப கிடைக்காது. அதேபோல் யாரிடம் இருந்தும் பணத்தை கடன் வாங்க கூடாது. அதையும் மீறி வாங்கினோம் என்றால் வட்டி மட்டுமே கட்ட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதிக அளவில் கடன் சேர ஆரம்பிக்கும்.
இதற்கு இணையான மற்றும் ஒரு செயல் இருக்கிறது. அதுதான் பொருட்களை இரவலாக வாங்குவது. நாளைக்கு திருப்பி தருகிறேன் என்று எந்த பொருளையும் யாரிடமிருந்தும் வாங்க கூடாது. அதேபோல் யாருக்கும் எந்த பொருளையும் நாளைக்கு கொடுத்து விடு என்று தரக்கூடாது. இதற்கு பதிலாக இதை நீயே வைத்துக்கொள் என்று கொடுத்து விடலாம்.
எந்த அளவிற்கு சனிக்கிழமை அன்று தானம் செய்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய பொருளாதார நிலை என்பது உயரும். முடிந்தவரை உடல் ஊனமுற்றவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு தானத்தை செய்வதன் மூலம் சனி பகவானின் அருளும், பெருமாளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மறவாமல் சனிக்கிழமை அன்று பெருமாளின் ஆலயத்திற்கு சென்று நெய் தீபம் ஏற்றி வைத்து அவரின் நாமங்களை உச்சரிப்பது என்பது மிகவும் சிறப்பு.
ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்களாக இருந்தாலும் வீட்டில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்திற்கும் முன்பாக சர்க்கரை பொங்கல், லட்டு போன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து தீபம் ஏற்றி அதிலும் குறிப்பாக மாவிளக்கு தீபம் ஏற்றி கோவிந்தா நாமத்தை உச்சரித்தோம் என்றால் பெருமாளின் அருளும், மகாலட்சுமி தாயாரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். சனிபகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் பெருக ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு
இந்த செயல்களை புரட்டாசி சனிக்கிழமை மட்டும் அல்லாமல் அனைத்து சனிக்கிழமையும் செய்யாமல் இருந்தோம் என்றால் சனி பகவானால் நமக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.