ஹோட்டலில் கொடுப்பது போல கொரகொரவென்று சுவையான புதினா துவையல் காரசாரமாக 5 நிமிடத்தில் செய்வது எப்படி?

puthina-thuvaiyal

ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள புதினா செடியை ஒவ்வொருவரும் கடையில் வாங்குவதை விட வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. புதினா என்பது கீரை வகை மட்டுமல்ல, மிகச் சிறந்த ஒரு மூலிகையும் ஆகும். அடிக்கடி புதினா உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் சுவாச பிரச்சனைகள் நீங்கும். மேலும் ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, தோல் வியாதிகள், பூச்சிக்கடி, பற்கள், ஈறுகள் பிரச்சனை, உஷ்ணம், வாந்தி போன்ற பிரச்சினைகளும் எளிதாக தீரும்.

mint

போதை வஸ்துகளை பயன்படுத்துபவர்கள் அடிக்கடி புதினா சேர்த்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். கோடை கால பிரச்சனைகளுக்கு புதினா சாறு ஜூஸ் போல தினமும் எடுத்துக் கொள்வது நல்லது, உடல் இதனால் குளிர்ச்சி அடையும். இத்தகைய அற்புதங்கள் நிறைந்த புதினா இலைகளைக் கொண்டு செய்யப்படும் துவையல் ஓட்டல் ஸ்டைலில் எப்படி கொரகொரவென்று மிகவும் சுவையாக அரைப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

புதினா துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
புதினா – ஒரு கட்டு
உளுந்தம் பருப்பு – 3 தேக்கரண்டி
வர மிளகாய் – 6
பூண்டு பல் – 4

mint-puthina-plant

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
இஞ்சி – 1 சிறு துண்டு(1/2 இன்ச்)
புளி – அரை எலுமிச்சம் அளவிற்கு
உப்பு – தேவையான அளவிற்கு

- Advertisement -

புதினா துவையல் செய்முறை விளக்கம்:
புதினாக் கீரையை ஆய்ந்து நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் மூன்று தேக்கரண்டி அளவிற்கு உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும். உளுத்தம் பருப்பு வறுபட்டதும் அதனுடன் வர மிளகாய்கள் போட்டு வறுக்கவும். பின்னர் தோலுரித்த பூண்டு பற்கள், தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும்.

puthina-thuvaiyal1

பின்னர் அதனுடன் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒருமுறை வதக்கி பின் அடுப்பை அணைத்து விடுங்கள். நன்கு ஆறிய பின் அதனை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். அதே கடாயில் மீதமிருக்கும் எண்ணெயில் ஆய்ந்து வைத்த புதினா இலைகளைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். ஐந்து நிமிடத்தில் இலைகள் சுருங்க வதங்கி விடும். பின்னர் அதனையும் மிக்சி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். இப்போது நைசாக அரைக்காமல் கொரகொரவென்று இரண்டு, மூன்று சுற்று சுற்றி இறக்கவும்.

puthina-thuvaiyal2

பின்னர் தாளிக்க கடுகு மற்றும் உளுந்து தாளித்து அரைத்து வைத்த துவையலில் கொட்டவும். அவ்வளவு தாங்க! காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் புதினா துவையல் தயார் ஆகி விட்டிருக்கும். இதனை எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். அல்லது இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு சைட் டிஷ் ஆகவும் வைத்துக் கொள்ளலாம். மிக மிக எளிமையாக ஆரோக்கியம் நிறைந்த இந்த துவையலை வாரம் 3 முறை கட்டாயம் சேர்த்து கொள்வது நலம் தரும்.