புழுங்கல் அரிசி தட்டு வடை | Puzhungal arisi thattai recipe
ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்றால் ஒரு முறை தட்டு வடையை இப்படி முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் இருக்கும் புழுங்கல் அரிசியை வைத்து எளிமையான முறையில் இந்த தட்டு வடையை செய்தால் ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடலாம். ஸ்னாக்ஸ் பிரச்சனை இருக்காது. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய, பெரியவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய சூப்பரான தட்டு வடை ஸ்நாக்ஸ் ரெசிபி இதோ உங்களுக்காக.
செய்முறை
உங்கள் வீட்டில் இருக்கும் 1/2 கிலோ புழுங்கல் அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். இட்லி அரிசி, ரேஷன் புழுங்கல் அரிசி கூட பயன்படுத்தலாம். அரிசியை மூன்று முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி, அதில் நல்ல தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இதோடு இன்னொரு தனியாக சின்ன கிண்ணத்தில், கடலைப்பருப்பு 2 ஸ்பூன், பாசிப்பருப்பு 1 ஸ்பூன், போட்டு தண்ணீர் ஊற்றி அதையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசி நன்றாக ஊறி வந்ததும், தண்ணீரை வடிகட்டி விட்டு, அரிசியை கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து புழுங்கல் அரிசியை மாவாக அரைத்து எடுக்க வேண்டும். இந்த மாவு நைசாக அரைபட வேண்டும். இட்லி மாவை விட கட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த மாவை அகலமான ஒரு பவுலில் வழித்து போட்டுக் கொள்ளுங்கள். இதோடு பொட்டுக்கடலை மாவு 100 கிராம், ஏற்கனவே ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பு பாசிப்பருப்பு, சீரகம் 1 ஸ்பூன், எள்ளு 2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், பெருங்காயத்தூள் 2 சிட்டிகை, கருவேப்பிலை 2 கொத்து, உப்பு தேவையான அளவு போட்டு கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வர மிளகாய் 4, பூண்டு பல் 4, போட்டு விழுதாக அரைத்து, அந்த விழுதை இந்த மாவோடு போட்டு இறுதியாக 2 ஸ்பூன் வெண்ணையை உருக்கி ஊற்றி, இந்த எல்லா மாவையும் கையை கொண்டு பிசைந்தால் சூப்பரான ஒரு தட்டை மாவு தயாராக இருக்கும். (தண்ணீர் ஊற்றி மாவை பிசைய கூடாது.) பிசைந்து வைத்திருக்கும் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வாழை இலை மேலே வைத்து மெலிசாக தட்டி எண்ணெயில் விட்டு பொறித்தெடுக்க வேண்டும்.
முடியாதவர்கள் ஒரு பிளாஸ்டிக் கவர் எடுத்துக்கோங்க. அதன் மேலே எண்ணெய் தடவி ஒரு தட்டை மாவு உருண்டையை வைத்து, மேலே இன்னொரு பிளாஸ்டிக் கவரை எண்ணெய் தடவி போட்டு, அதன் மேலே அகலமான ஒரு தட்டு அல்லது கிண்ணத்தை வைத்து அழுத்தினால் மெல்லிசான தட்டை கிடைக்கும். அதை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டியது தான்.
இதையும் படிக்கலாமே: டக்குனு ஒரு நிமிஷத்துல இந்த கார தோசையை ரெடி பண்ணலாம். அது எப்படின்னு யோசிக்கிறீங்களா? வாங்க செஞ்சு பார்த்துருவோம்.
இந்த தட்டையை மொறு மொறுப்பாக எண்ணெயில் போட்டு பொறித்து எடுப்பதற்கு ஒரு டிப்ஸ் இருக்கிறது. அடுப்பை மிதமான தீயில் வைத்து முதலில் தட்டிய தட்டைகளை எல்லாம் போட்டு அரைவேக்காடாக பொறித்து எடுத்து, தனியாக பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா தட்டைகளும் பாதி அளவு வெந்து வறுபட்டு இருக்கும். பாதி அளவு வேக விட்டு வறுத்து எடுத்து வைத்திருக்கும் இந்த எல்லா தட்டைகளையும், மீண்டும் எண்ணெயில் போட்டு பொன்னிறம் வரும் வரை பொறித்து எடுத்தால் மொறுமொறுப்பாக தட்டை கிடைக்கும். ட்ரை பண்ணி பாருங்க. சுலபமான சுவைத்தரும் இந்த ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க.