இட்லி தோசை மாவு இல்லையா? 5 நிமிடத்தில் ஆரோக்கியமான ராகி தோசை மாவு தயார் செய்வதற்கு 1 கப் ராகி இருந்தால் போதுமே!

ragi-dosai
- Advertisement -

எப்போதும் இட்லி, தோசை மாவு என்று செய்து அலுத்து போனவர்களுக்கு இது போல புதிதாக மற்றும் ஆரோக்கியமுள்ள ராகி தோசை செய்து கொடுத்தால் ரொம்பவே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். அரிசி உணவை விட மற்ற தானியங்களால் செய்யப்படும் உணவுகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் பலப்படும். அந்த வகையில் ராகி தோசை மாவை ஐந்து நிமிடத்தில் எளிதாக, சுவையாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ராகி தோசை செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை அவல் – ஒரு கப், கேழ்வரகு மாவு – ஒன்றரை கப், உப்பு – தேவையான அளவு, புளித்த மோர் – அரை கப் அல்லது புளித்த தோசை மாவு – அரை கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – ஒன்று, நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு.

- Advertisement -

ராகி தோசை செய்முறை விளக்கம்:
முதலில் வெள்ளை அவல் அல்லது சிகப்பு அவல் எதுவாக இருந்தாலும் ஒரு கப் அளவிற்கு எடுத்து நன்கு சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீருடன் ஊற வைத்த அவலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நன்கு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதிலேயே ஒன்றரை கப் அளவிற்கு கேழ்வரகு மாவு சேர்க்க வேண்டும். கேழ்வரகு மாவு நீங்கள் கடையில் வாங்குவதை விட, வீட்டில் கைப்பட அரைத்ததாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். கேழ்வரகு மாவு சேர்த்த பின்பு தோசை சுவையாக வருவதற்கு புளித்த மோர் அல்லது புளித்த இட்லி தோசை மாவு அரை கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தயிர் சேர்க்க கூடாது! புளித்த மோர் போல நீர்க்க தயிரைக் கரைத்து சேர்க்க வேண்டும். பிறகு இந்த மாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நைஸாக மீண்டும் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தோசை மாவு பதத்துக்கு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். நீர்க்க இருந்தால் கேழ்வரகு மாவு சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல்லை வைத்து கொள்ளுங்கள். தோசைக்கல் சூடேறியதும் அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊத்தாப்பம் செய்வது போல தடிமனாக ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த தோசை மாவு கொண்டு மொறுமொறுவென்று தோசையை வார்க்க முடியாது, எனவே இது போல ஊத்தாப்பம் மாதிரி செய்து அதன் மீது பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை தூவி சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் விட்டு இரண்டு புறமும் சிவக்க வறுத்து எடுத்தால் அற்புதமான ஆரோக்கியம் உள்ள ராகி தோசை தயார்! நீங்களும் இதே முறையில் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -