உடல் எடையை குறைக்க வித்யாசமான ஹெல்தி பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி உங்களுக்காக. பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டும் ‘ராகி ஊத்தப்பம்’.

ragi-dosai
- Advertisement -

ராகி தோசையை நாம் எப்படி செய்வோம். அரிசி மாவு, ரவை இந்த பொருட்களை சேர்த்து தானே செய்வோம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் பாசிப்பருப்பை சேர்த்து இந்த ராகி தோசையை நாம் செய்யப் போகின்றோம். ஆனால் கஷ்டமெல்லாம் இல்லை. ரொம்ப ரொம்ப ஈஸி ரெசிபி தான். வாங்க அந்த சூப்பர் பாசிப்பருப்பு ராகி தோசை ரெசிபியை தெரிந்து கொள்வோம். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் இந்த ரெசிப்பியை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் இந்த தோசையை கொடுக்கலாம். உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும்.

pasi-paruppu

முதலில் 1 கப் அளவு பாசிப்பருப்பை எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு மூன்று முறை கழுவி அதில் நல்ல தண்ணீரை ஊற்றி, 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊறிய இந்தப் பாசி பருப்பை தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல தோசை மாவு பதத்திற்கு அரைத்து இதையும் ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அரைத்து இருக்கும் இந்த பாசிப்பருப்பு விழுதுடன், 1 கப் அளவு ராகி மாவை சேர்த்து கட்டி படாமல் கரைக்கவேண்டும். தண்ணீர் தேவைப்படும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி இந்த மாவை தோசை மாவு பதத்திற்கு பக்குவமாக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். (எந்த கப்பில் பாசிப்பருப்பை அளக்கிறீர்களோ அதே கப்பில் கேழ்வரகு மாவை அளந்து கொள்ள வேண்டும்.) முதலில் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி மாவை கரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் பிறகு கூட தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம்.

ragi-dosai1

இந்த மாவுடன் தேவையான அளவு உப்பை போட்டு கரண்டியால் நன்றாக கலந்து விட்டு, உடனடியாக தோசை சுட வேண்டும் என்றால் 1/4 ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து கலந்து தோசை வார்த்து விடலாம். சோடா உப்பு சேர்க்க கூடாது என்று நீங்கள் நினைத்தால் 2 அல்லது 3 மணி நேரம் இந்த மாவை மூடி போட்டு அப்படியே புளிக்க வைத்து விடுங்கள். அதன்பின்பு தோசை ஊற்றி கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்.

- Advertisement -

தோசை மாவு நன்றாக ஊறி புளித்தபின்பு கொஞ்சம் திக்காக மாறி இருந்தால், கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து இந்த மாவை, அப்படியே கல்லில் மெல்லிசாக ஊற்றினால் சூப்பரான மொரு மொரு தோசை நமக்கு கிடைக்கும். எப்போதும்போல அரிசி மாவு தோசை சுடுவது போல கல்லில் ஊற்றி எண்ணெய் ஊற்றி சிவக்க வைத்து எடுத்து பரிமாறுங்கள். இது ஒரு வகை தோசை.

ragi-dosai2

பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, இவை எல்லாவற்றையும் ஒரு சிறிய பௌலில் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதில் இரண்டு சிட்டிகை உப்பு, 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

ragi-dosai3

தயாராக இருக்கும் ராகி மாவை தோசைக்கல்லில், கல் தோசை போல ஊற்றி அதன் மேல் இந்த வெங்காயம் தக்காளி கலவையை தூவி ஊத்தப்பம் ஆக, இந்த தோசையை சுட்டு கொடுத்தால் இன்னும் இன்னும் கூடுதல் சுவை நமக்கு கிடைக்கும். உங்கள் விருப்பம் போல இந்த தோசைக்கு சைட் டிஷ் சட்னி சாம்பார் குழம்பு எதை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த தோசை ரெசிபி பிடிச்சிருக்கா. ஆரோக்கியமான இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. சூப்பரா இருக்கும்.

- Advertisement -