விசுவாவசு வருடத்தின் ராகு கேது பெயர்ச்சியானது நாளைய தினம் 26-4-2025 சனிக்கிழமை அன்று வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இந்த ராகு கேது பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. நாளைய தினம் ராகுவும் கேதுவும் எந்த நேரத்தில் பெயர்ச்சியாக இருக்கிறார்கள், எந்த ராசியில் இருந்து, எந்த ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார்கள், கட்டாயம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள் என்னென்ன, ராகு கேது பெயர்ச்சியால் நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் செய்ய வேண்டிய இறை வழிபாடு என்ன, ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
ராகு கேது பெயர்ச்சி 2025
ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இந்த பெயர்ச்சியானது நாளைய தினம் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4:28 மணிக்கு நடக்கவிருக்கிறது. இந்த பெயர்ச்சிக்குப் பிறகுதான் பரிகாரம் செய்ய வேண்டும்.
ராகு கேது பெயர்ச்சியான பிறகு ஒரு முறை குளித்துவிட்டு, உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் நவகிரக சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு சென்று ராகு கேதுவுக்கு தேங்காய் உடைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும் இது பொதுப்படையான பரிகாரம். நாளைய தினம் நிறைய கோவில்களில் இந்த ராகு கேதுவுக்கு சாந்தி பூஜை நடைபெறும். ஹோமங்கள் நடைபெறும். அதில் கலந்து கொள்வதும் நன்மையை கொடுக்கும்.
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்
இந்த பரிகாரத்தை எந்தெந்த ராசிகள் கட்டாயம் செய்ய வேண்டும். ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம். இந்த 9 ராசிக்காரர்களும் ராகு கேது பெயர்ச்சி முடிந்த பிறகு பரிகாரம் செய்து கொள்வது நல்ல பலனை கொடுக்கும். இது தவிர உங்களுடைய சொந்த ஜாதக கட்டத்தில் ராகு கேது பெயர்ச்சியால் ஏதேனும் பாதிப்புகள் வருவதாக இருந்தால், ஜோதிடர்களின் மூலம் உங்களுடைய ஜாதக கட்டத்தை வைத்து பிரச்சினைகளை நீங்கள் அறிந்திருந்தால், அதற்காக பயப்பட வேண்டாம்.
நாகர் சிலை உள்ள கோவில்களுக்கு செல்லுங்கள். சில இடங்களில் எல்லாம் அந்த நாகர் சிலைக்கு நாமே நம்முடைய கையால் அபிஷேகம் செய்து, பூஜை செய்யக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். அரச மரத்தடியில் வைத்திருக்கும் நாகர் சிலைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகளால் அந்த நாகர் சிலைகளுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி, அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நெய் விளக்கு ஏற்றி கற்பூரம் ஊதுவத்தி ஏற்றி, வணங்கி வழிபாடு செய்தால் ராகு கேது பெயர்ச்சியின் மூலம் உங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு தொந்தரவும் வராமல் இருக்கும். இது ஒரு பரிகாரம்.
அடுத்தபடியாக ராகு கேதுவால் எந்த தொந்தரவும் வாழ்நாளில் வரக்கூடாது என்றால் காளி, பிரத்தியங்கிரா, வாராஹி அம்மன் இதுபோல அம்மனை வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை தரும். இதுகூட உங்களால் செய்ய முடியாது என்றால், கவலையே படாதீங்க. தினமும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே: தலையெழுத்தை மாற்றும் சிவ மந்திரம்
விநாயகரை வழிபாடு செய்துவர ராகு கேதுவால் எந்த தொந்தரவும் உங்களுடைய வாழ்க்கையில் வராது. அதிலும் குறிப்பாக ஒரு வெள்ளருக்கு விநாயகரை வாங்கி வீட்டில் வைத்து வழிபாடு செய்ய ராகு கேது கொடுக்கும் துன்பங்கள் குறையும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த எளிமையான ஆன்மிகம் சார்ந்த பரிகார முறைகள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.