ரேஷன் பச்சரிசியில் இப்படியும் கூட ஆப்பம் செய்யலாமே. சும்மா அருமையா கூடை மாதிரி, கடாயில் ஒட்டாமல் வரும்.

aapam
- Advertisement -

இந்த ஆபத்தை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள். இன்று நாம் முழுமையாக ரேஷன் பச்சரிசியை வைத்து சூப்பரான சுவையான சுலபமான ஒரு ஆப்பம் எப்படி சுடுவது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ரேசன் பச்சரிசி என்றாலே அதை முதலில் நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அது மட்டும் தான் கொஞ்சம் கஷ்டம். சுத்தம் செய்து விட்டீர்கள் என்றால் இந்த ஆப்ப மாவை சுலபமாக அரைத்து விடலாம். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்த்துவிடுவோம்.

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரேசன் பச்சரிசி – 4 டம்ளர், உளுந்தம் பருப்பு – 3/4 டம்ளர், வெந்தயம் – 1 ஸ்பூன், இந்த அளவுகளில் மூன்று பொருட்களையும் எடுத்துக்கொண்டு. நன்றாக கழுவிவிடுங்கள். 5 லிருந்து 6 முறை கழுவிக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். உங்கள் ரேஷன் அரிசி எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அதற்கு தகுந்தது போல கழுவிக்கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் கல் உப்பை சேர்த்து இறுதியாக ஒரு முறை உராய்ந்து கழுவிவிட்டால், பச்சரிசி வெள்ளையாக வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி சுத்தம் செய்த இந்த அரிசி பருப்பில் நல்ல தண்ணீரை ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள்.

- Advertisement -

அரிசியும் பருப்பும் நன்றாக ஊறிய பின்பு கிரைண்டரில் இந்த மாவை அரைக்க வேண்டும். முதலில் வடித்த சாதம் அல்லது பழைய சாதம் எதுவாக இருந்தாலும் உங்களுடைய கையில் 2 கைப்பிடி அளவு எடுத்து அதை கிரைண்டரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அந்த சாதத்தை மைய விழுதுபோல் அரைத்து விடுங்கள். அதன் பின்பு ஊற வைத்திருக்கும் அரிசியை கிரைண்டரில் போட்டு நறநறவென 90 சதவிகிதம் வரை இந்த மாவை அரைத்து வழித்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு மூடி போட்டு 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். (கிரைண்டரில் மாவு அரைக்கும் போது தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.)

இரவு முழுவதும் புளித்தாலும் சரி. மறுநாள் காலை புசுபுசுவென பொங்கி வந்திருக்கும். மாவு கொஞ்சம் கட்டியாகத் தான் இருக்கும். தோசை மாவு பதத்திற்கு நம்முடைய ஆப்ப மாவு இருந்தால் ஆப்பம் வார்க்க சரியாக இருக்கும். தேங்காய் பால் நமக்கு இப்போது தேவை, 1/2 மூடி தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து பிழிந்து தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மாவு எந்த அளவிற்கு கட்டியாக இருக்கின்றதோ, அந்த அளவிற்கு தேங்காய் பாலை ஊற்றி கரைத்து, மாவை தோசை மாவு பக்குவத்திற்கு எடுத்து வாருங்கள்.

- Advertisement -

இந்த ஆப்பத்திற்கு ஆப்ப சோடா மாவு கூட தேவையில்லை. அவ்வளவு தான் ஆப்பம் செய்ய மாவு தயார். அடுப்பில் ஆப்ப சட்டியை வைத்து விட்டு, எண்ணெயை தடவி விடுங்கள். கடாய் நன்றாக காயட்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு எப்போதும் போல ஆப்ப மாவை கடாயில் ஊற்றி, எடுத்து சுற்றி ஒரு மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள்.

இரண்டிலிருந்து மூன்று நிமிடத்திற்குள் ஆப்பம் வெந்து சிவந்து வந்துவிடும். மூடியை திறந்து லேசாக ஓரத்தில் கரண்டியை வைத்து அல்லது ஸ்பூனை வைத்து எடுத்தால் ஒட்டாமல் வரும். கூடை போல ஆப்பம் தயார். ஆப்பத்தின் சுத்தியிலும் மொறுமொறுப்பாக இருக்கும். நடுவுல பஞ்சு போல இருக்கும்.

உங்க இஷ்டம் தான். ஆட்டுக்கால் பாயா, கறி குழம்பு, அப்படி இல்லையென்றால் தேங்காய்ப்பால், வெஜிடபிள் குருமா, எதை வைத்து வேண்டுமென்றாலும் பரிமாறலாம். அருமையான ஆப்பம் தயார். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -