ரேஷன் பச்சரிசியை பெரும்பாலும் காய வைத்து அரைத்து இடியாப்பம், புட்டு இப்படியான டிபன் வகைகளை தான் செய்வார்கள். சாதம் வடிப்பது, பொங்கல் செய்வது போன்றதை எல்லாம் இதில் அதிகம் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இது அரிசி சரியான பக்குவத்திற்கு வராது என்று செய்ய தயங்குவார்கள். இன்னொன்று இந்த அரிசியில் கொஞ்சம் வாடை வரும். இந்த ரேஷன் பச்சரிசியை வைத்து சுவையாக ஹோட்டலில் கொடுக்கும் அதே சுவை மான பொங்கலை வீட்டிலும் செய்ய முடியும். அதை எப்படி செய்வதென்று சமையல் குறிப்பு பற்றி தான் இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்தப் பொங்கல் செய்வதற்கு அரிசியும் பருப்பின் அளவு சரியாக இருந்தால் தான் ருசியாக இருக்கும். முக்கால் கப் பச்சரிசிக்கு கால் சிறு பருப்பு சேர்த்தால் போதும் பொங்கல் பதம் கரெக்டா இருக்கும்.
ரேஷன் பச்சரிசியில் பொங்கல் செய்யும் முறை:
முக்கால் கப் பச்சரிசி எடுத்து நான்கு அல்லது ஐந்து முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கல் இல்லாமல் அரித்து சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள். இத்துடன் கால் கப் சிறு பருப்பு, முக்கால் கப் அரிசி இரண்டையும் குக்கரில் சேர்த்து ஒரு கப் அளவிற்கு மூன்று கப் தண்ணீர் ஊற்றி கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் வரும் வரை வைத்து விடுங்கள். விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும்.
இன்னொரு புறம் அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து 3 டேபிள் ஸ்பூன் நெய், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இது காய்ந்தவுடன் 1 டேபிள் ஸ்பூன் மிளகு, 1 டேபிள் ஸ்பூன் சீரகம், இஞ்சி 1 துண்டு பொடியாக நறுக்கியது, 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி ஒரு கொத்து கருவேப்பிலை இவை அனைத்தையும் எண்ணெயில் போட்டு நிறம் மாறியவுடன், 10 முந்திரி பருப்பை இதில் சேர்த்து, முந்திரி சிவந்து வந்தவுடன், 1 சிட்டிகை பெருங்காயத் தூளையும் சேர்த்து இந்த தாளிப்பை பொங்களில் ஊற்றி நன்றாக கலந்து மூடி வைத்து விடுங்கள்.
பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கலந்து விட்டு விடுங்கள். ரேஷன் பச்சரிசியில் நல்ல குழைய வைத்த சுவையான பொங்கல் ரெடி.
இதற்கு தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி, சாம்பார் கார சட்னி, புதினா சட்னி, இப்படி பொங்கலை பொறுத்த வரையில் எந்த சைடு டிஷ் இருந்தாலும் நன்றாக தான் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: உங்க வீட்ல வெங்காயம் இருக்கா? உடனே இந்த சட்னி ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. இதுவரை நீங்கள் ருசித்திடாத முற்றிலும் வித்தியாசமான சுவையில் வெங்காய சட்னி ரெசிபி.
இது அப்படியே ஹோட்டல் சுவையில் இருக்கும். இதை நீங்கள் ரேஷன் பச்சரிசியில் தான் செய்தீர்கள், என்று சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.