எப்படி கிண்டினாலும் ரவை உப்புமா உதிரி உதிரியாக பூ போல வரவில்லையா? இந்த ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க, இனி உங்களுக்கும் ரவை உப்புமா பிடிக்கும்!

- Advertisement -

ரவை உப்புமா என்று சொன்னாலே வீட்டில் யாருக்கும் பிடிப்பதில்லை. இட்லி, தோசையை கூட தினமும் தின்று விடலாம் ஆனால் ரவை உப்புமாவை ஒரு நாள் கூட திங்க முடியாது என்று நினைப்பவர்களுக்கு அதன் சுவையும், அருமையும் தெரிந்தால் அப்படி கூறவே மாட்டார்கள். ரவை உப்புமா முறையாக செய்தால் உதிரி உதிரியாக சூப்பராக வரும். ருசியான உதிரி உதிரியான ரவை உப்புமாவுக்கு என்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரவை உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – 2 கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, துருவிய இஞ்சி – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, கடுகு – கால் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், நெய் – தேவையான அளவு.

- Advertisement -

ரவை உப்புமா செய்முறை விளக்கம்:
ரவை உப்புமா செய்வதற்கு முதலில் 2 கப் அளவிற்கு ரவையை நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரவையை வறுக்காமல் செய்தால் கண்டிப்பாக ரவை உதிரி உதிரியாக வராது எனவே ரவையை அடிப்பிடிக்காமல் சிம்மில் வைத்து வெறும் வாணலியில் போட்டு ஒரு பத்து நிமிடம் நன்கு வறுத்துக் கொண்டே இருந்தால் மொறு மொறு என்று கிரிஸ்பியாக ரவை நன்கு வறுபட்டு விடும். அதன் பிறகு நீங்கள் அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து தேவையான அளவிற்கு நெய் அல்லது எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள் நன்கு வறுபட்டதும் 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். வாசனைக்கு துருவிய இஞ்சி அரை ஸ்பூன் சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் தோலுரித்து சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் ஒன்றை நன்கு உதிர்த்து சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் லேசாக வதங்கினால் போதும், அதிகம் வதங்க வேண்டிய அவசியம் இல்லை. அதன் பிறகு 2 கப் ரவைக்கு சரியாக மூன்று கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்தால் தான் சரியாக இருக்கும். அதற்கு மேல் சேர்த்தால் ரவை உப்புமா குழைந்துவிடும். அதற்கு கீழ் சேர்த்தால் ரவை உப்புமா வேகவே செய்யாது. எனவே ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் தண்ணீர் அளந்து எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவுக்கு உப்பு போட்டு கொதிக்க விடுங்கள்.

தண்ணீர் ஒரு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள ரவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிண்ட வேண்டும். கட்டிகள் இல்லாமல் ரவை முழு தண்ணீரையும் உரிய ஆரம்பித்து விடும். அதன் பிறகு ஒரு மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள். இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை எடுத்து திறந்து நன்கு அழுத்தம் கொடுத்து பிரட்டி விடுங்கள். அப்போது தான் ரவை வேகும். பின்னர் தேவையான அளவிற்கு நெய் சேர்த்து ஒருமுறை கிளறி 2 நிமிடம் மூடி போட்டு விடுங்கள். அதன் பிறகு மீண்டும் எடுத்துப் பாருங்கள் இது போல மூன்று அல்லது நான்கு முறை செய்தால் நன்கு உதிரி உதிரியாக உப்புமா வெந்து ரெடியாகிவிடும், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -