இந்த உலகத்தை பார்ப்பதற்கு நமக்கு உறுதுணையாக இருப்பது நம்முடைய கண்களே. அப்படிப்பட்ட கண்களை நாம் முறையாக பராமரித்து அதற்குரிய ஓய்வை கொடுத்தால் அந்த கண்கள் மிகவும் நன்றாக செயல்படும். இன்றைய காலத்தில் அந்த ஓய்வை நாம் தராமல் கண்களை சோர்வடைய செய்கிறோம். இதனால் கண்களை சுற்றி கருவளையம் ஏற்படுகிறது. அப்படி கருவளையம் ஏற்பட்டு விட்டால் முகம் கலை இழந்து போய்விடும். அப்படிப்பட்ட கருவளையத்தை நீக்கி கண்களை புத்துணர்ச்சியுடனும் பிரகாசத்துடனும் அழகாகவும் வைப்பதற்கு எந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
முறையாக தூக்கம் இல்லாதது, அதிகமாக கைபேசி பார்ப்பது போன்ற காரணங்களாலும், ஒரு சில நோய்களாலும் கண் கருவளையம் என்பது ஏற்படும். நோய்களால் ஏற்படக்கூடிய கருவளையத்தை நாம் முறையான மருத்துவத்தை மேற்கொண்டு தான் சரி செய்ய முடியும். ஆனால் கண்கள் சோர்வாவதால் ஏற்படக்கூடிய கருவளையத்தை நாம் நினைத்தோம் என்றால் கண்டிப்பான முறையில் சரி செய்ய முடியும். முதலில் போதுமான அளவு உறக்கத்தை நாம் மேற்கொண்டு கண்களுக்கு ஓய்வை தர வேண்டும்.
அதிகமான அளவு கைப்பேசி, தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு தந்துவிட்டு பிறகு பார்ப்பது கண்களை பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும். சரி இவ்வளவு செய்தும் கண்ணை சுற்றி கருவளையம் வந்துவிட்டது, இந்த கருவளையம் ஏற்பட்டதால் முகமே அசிங்கமாக தெரிகிறது என்று வருத்தப்படுபவர்களுக்குரிய பதிவுதான் இது.
அனைத்து மருந்து கடைகளிலும் விட்டமின் இ கேப்ஸ்யூல் கிடைக்கும். இதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த விட்டமின் இ கேப்ஸ்யூல் நம்முடைய தலைமுடிக்கும் முகத்திற்கும் பல வகைகளில் நன்மைகள் தரக்கூடிய ஒன்று. ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு விட்டமின் இ கேப்ஸ்யூல் எடுத்து அதற்குள் இருக்கும் எண்ணையை ஒரு ஸ்பூனில் ஊற்ற வேண்டும். எதற்காக ஸ்பூனில் ஊட்ட வேண்டும் என்றால் எந்த அளவிற்கு நாம் விட்டமின் இ கேப்ஸ்யூல் எடுக்கிறோமோ அதே அளவிற்கு நாம் பாதாம் எண்ணையையும் எடுக்க வேண்டும் என்பதற்காக தான்.
இப்பொழுது விட்டமின் இ கேப்ஸ்யூல் ஸ்பூனில் ஊற்றி அளவு பார்த்துவிட்டு அதை கிண்ணத்தில் சேர்த்து விடுங்கள். பிறகு அதே அளவு பாதாம் எண்ணையையும் எடுத்து கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணையை இரவு படுக்க செல்வதற்கு முன் முகத்தை நன்றாக சுத்தமாக கழுவி விட்டு ஈரமில்லாமல் துடைத்து விட்டு நம்முடைய மோதிர விரலில் தொட்டு கண்களை சுற்றி தடவ வேண்டும்.
இதை கிளாக்வைஸ் ஆன்டி கிளாக் வைஸ் கண்களை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு ஐந்து நிமிடம் செய்துவிட்டு உறங்கச் செல்ல வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். நல்ல தூக்கம் ஏற்படும். இதை தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: முகம் மற்றும் கழுத்தில் இருக்கும் கருமை நீங்க ஃபேஸ் பேக்
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை வைத்து கலை இழந்த நம் முகத்தை கலையாக மாற்ற முடியும்.