ஹாப்பிமா சேர்க்காமல் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் ஃப்ரைட் ரைஸ் பக்காவா வீட்டிலேயே செய்வது எப்படி? இதன் சுவைக்கு காரணமான ரகசிய பொருட்கள் தான் என்ன?

basmathi-fried-rice
- Advertisement -

வெஜ் ப்ரைட் ரைஸ் என்றாலே நமக்கு அலாதியான பிரியம் தான். பிரியாணி எந்த அளவிற்கு விரும்பி சாப்பிடுகிறோமோ, அதே அளவிற்கு இந்த ப்ரைட் ரைஸ்ஸும் மக்களால் பெருமளவு விரும்பி சாப்பிடப்படுகிறது. ரெஸ்டாரண்டில் அதிகம் விற்கும் உணவு வகையாக இந்த ப்ரைட் ரைஸ் இடம் பிடித்துள்ளது. அந்த அளவிற்கு சுவை மிகுந்த இந்த ப்ரைட் ரைஸ் வீட்டில் செய்தால் மட்டும் இதே அளவிற்கு சுவை தருவதில்லை. இதற்கு அதில் சேர்க்கப்படும் ரகசிய பொருட்களும் ஒரு காரணமாகும். இன்ஸ்டன்ட் மசாலா பவுடர், ஹாப்பிமா கொண்டு செய்யப்பட்டாலும் தராத ருசியை தரக்கூடிய இந்த ரகசிய பொருட்கள் என்ன? சூப்பரான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜ் ப்ரைட் ரைஸ் செய்வது எப்படி? என்கிற ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

basmati-rice

வெஜ் ப்ரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 400 கிராம், சமையல் எண்ணெய் – தேவையான அளவிற்கு, பூண்டு – 5 பல், பெரிய வெங்காயம் – ஒன்று, கேரட் – ஒன்று, பீன்ஸ் – 6, குடை மிளகாய் – ஒன்று, மெல்லியதாக நறுக்கிய கோஸ் – ஒரு கப், சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், கிரீன் சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன், ரெட் சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன், டொமேட்டோ சாஸ் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – கால் டீஸ்பூன், கருப்பு மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன், வெள்ளை மிளகு தூள் – ஒரு டீஸ்பூன், வெங்காயத் தாள் – 3 ஸ்பூன், அஜினமோட்டோ – 1 ஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு.

- Advertisement -

வெஸ் ப்ரைட் ரைஸ் செய்முறை விளக்கம்:
முதலில் பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து களைந்து நன்கு தண்ணீரில் அலசி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் பூண்டை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான காய்கறிகளை பொடி பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் நீரை கொதிக்க விட்டு அரிசிக்கு தேவையான உப்பை இப்போதே சேர்த்து பாஸ்மதி அரிசியை போட்டு வேக வைக்க வேண்டும். பாஸ்மதி அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வர சமையல் எண்ணெயை கொஞ்சமாக மேலே ஊற்றிக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசி முக்கால் பதம் வெந்ததும், பத்து நிமிடத்தில் இந்த பதத்திற்கு பாஸ்மதி அரிசி வெந்து விடும். எனவே கவனமாக அருகிலிருந்து பார்த்துக் கொள்ளுங்கள். அரிசி வெந்தவுடன் தண்ணீர் இல்லாமல் நீர் முழுவதும் வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். சூட்டுடன் சமைத்தால் பாஸ்மதி அரிசி உடைந்து போய்விடும் என்பது முக்கிய குறிப்பாகும்.

fried-rice

அடுப்பைப் பற்ற வைத்து அதில் அடி கனமான இரும்பு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். ப்ரைட் ரைஸ் செய்ய இரும்பு வாணலி சரியான தேர்வாக இருக்கும். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும், அதில் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும், ஒவ்வொரு காய்கறியாக சேர்க்க வேண்டும். சீக்கிரம் வேகும் காய்கறிகளை கடைசியாக சேர்ப்பது நல்லது என்பதும் ஒரு குறிப்பாகும்.

- Advertisement -

முதலில் பொடி பொடியாக நறுக்கிய கேரட்டை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் பொடி பொடியாக மெல்லியதாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து வதக்குங்கள். பின்னர் மெல்லியதாக, நீளமாக நறுக்கிய முட்டைகோஸ் மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். காய்கறிக்கு தேவையான உப்பை மட்டும் இப்போது சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறிகள் பாதி அளவிற்கு வதங்கியதும், காய்கறிகளை ஒதுக்கி நடுவில் ஒரு குழி போல தோண்டி வைத்துக் கொள்ளுங்கள். அதனுள் கிரீன் சில்லி சாஸ், ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ், டொமேட்டோ சாஸ் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் எல்லா காய்கறிகளையும் நன்கு ஒன்று போல் கலந்து கொள்ளுங்கள். பிறகு அஜினமோட்டோ சேர்த்துக் கொள்ளுங்கள். ஃப்ரைட் ரைஸ்ஸின் ஒரிஜினல் சுவைக்கு அஜினமோட்டோ சேர்ப்பது வழக்கம். ஆனால் அது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதல்ல, எனவே அதனை தவிர்த்து விட்டு சமைப்பது நல்லது.

பின்னர் ஆற வைத்துள்ள உதிரி உதிரியான பாஸ்மதி அரிசியை சேர்த்து அதன் மீது ரெண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு, அரிசி உடையாமல் கடாயை தூக்கி குலுக்க வேண்டும். இப்படி செய்ய வராதவர்கள், ரெண்டு கரண்டியை கொண்டு லேசாக ஒன்று போல் கலந்து வருமாறு பிரட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கருப்பு மிளகு தூள் மற்றும் வெள்ளை மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து கொள்ளுங்கள். பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் இப்போது இறுதியாக தான் சேர்க்க வேண்டும் என்பதும் ஒரு குறிப்பாகும். அவ்வளவுதாங்க அப்படியே சுடச்சுட தட்டில் பரிமாற வேண்டியது தான். இதனுடன் கோபி மஞ்சூரியன், டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ் போன்றவற்றை தொட்டு சாப்பிட்டால் ரெஸ்டாரண்டில் இருக்கும் உணர்வை ஏற்படுத்தும். இதே முறையில் நீங்களும் உங்களுக்குப் பிடித்த வெஜ் ப்ரைட் ரைஸ்ஸை வீட்டிலேயே செய்து அனைவரையும் அசத்துங்கள்.

- Advertisement -