தின்பண்டங்களுக்கு ஆசைப்படாத நபர்களே இருக்க மாட்டார்கள். சாப்பாடு சாப்பிடுவதற்கு பதிலாக வெறும் தின்பண்டங்களை மட்டுமே சாப்பிட்டு வாழ்பவர்களும் பலர் இருக்கிறார்கள். அவர்களை தின்பண்ட பிரியர்கள் என்றே கூற வேண்டும். அப்படி தின்பண்டத்தின் மேல் ஆசை வைத்திருப்பவர்கள் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அப்படிப்பட்ட தின்பண்டங்களில் ஒன்றான ரிங் முறுக்கை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
தமிழர்கள் அதிகம் செய்யக்கூடிய தின்பண்டங்களில் ஒன்றுதான் முறுக்கு. முறுக்கு பல வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு முறுக்கிற்கும் ஒவ்வொரு விதமான சுவை இருக்கும். அந்த வகையில் கடைகளில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய முறுக்குகளில் ஒன்றான ரிங் முறுக்கை மிகவும் எளிமையாக சிரமம் இல்லாமல் எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு – ஒரு கப் தண்ணீர் – ஒரு கப் உப்பு – தேவையான அளவு மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் கருப்பு எள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சரிசி மாவை ஒரு கடாயில் போட்டு வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து வறுக்க வேண்டும். வாசம் வந்தவுடன் மாவை எடுத்து ஒரு தட்டில் போட்டு ஆற வைத்து விடுங்கள். அதே கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் லேசாக சூடான உடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய் இவை அனைத்தையும் சேர்க்க வேண்டும்.
பிறகு சீரகம், எள்ளு இவை இரண்டையும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது இவற்றின் ஏதாவது ஒன்றை மட்டுமாவது சேர்த்துக் கொள்ளலாம் அது உங்களின் விருப்பம். இவை அனைத்தும் நன்றாக கொதிக்கும் பொழுது அடுப்பை குறைந்த தீயில் வைத்து நாம் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும். மாவு அனைத்தையும் கொட்டி நன்றாக கிளறிய பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டை போட்டு மூடி வைத்துவிட வேண்டும்.
ஐந்து நிமிடம் அப்படியே இருக்கட்டும். பிறகு தட்டை திறந்து நம் கைகளால் மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைய வேண்டும். மாவு லேசாக சூடாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கையை தண்ணீரில் நனைத்துவிட்டு பிறகு பிணையலாம். தண்ணீரை ஊற்றி பிணைய கூடாது. மாவை நன்றாக பிணைந்த பிறகு மறுபடியும் ஒரு தட்டை வைத்து மூடி வைத்து விட வேண்டும். இப்பொழுது சிறிதளவில் மாவை எடுத்து ரிங்கு முறுக்கு கணம் வரும் அளவிற்கு மெல்லியதாக நீளவாக்கில் உருட்ட வேண்டும். பிறகு ஒரு விரல் அளவிற்கு அந்த மாவை சுற்றி எடுத்து ரிங் போன்று தயார் செய்து விட வேண்டும்.
இப்படி செய்வது சிரமமாக இருக்கிறது என்னும் பட்சத்தில் முறுக்கு பிழியும் கட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஒன்று அல்லது இரண்டு ஓட்டைகள் இருக்கும் அச்சை போட்டு அதில் நாம் பிணைந்து வைத்திருக்கும் மாவை போட்டு பிழிய வேண்டும். அப்பொழுதுதான் அதை எடுத்து நம் விரலில் சுற்றி ரிங்கு போல மாற்ற முடியும். இப்படி நாம் பிணைந்து வைத்திருக்கும் மாவு அனைத்தையும் ரிங்கு போல சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் ரிங்கை எண்ணெயில் போட வேண்டும். சிறிது நேரம் அது சிவக்கும் அளவிற்கு விட்டுவிட்டு பிறகு கரண்டியை போட்டு பிரட்டி விட வேண்டும். இரண்டு புறமும் அதே போல் அடுப்பை குறைந்த தீயில் வைத்தால் தான் அந்த முறுக்கு கருகாமல் நன்றாக வேகும். பிறகு ரிங்கு முறுக்கை பிரட்டி போட்டு இரண்டு புறமும் நன்றாக வெந்தவுடன் அதை அப்படியே எடுத்து வைத்து விடலாம். அவ்வளவுதான் ரிங்கு முறுக்கு தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: சத்தான சுவையான கோதுமை மாவு இடியாப்பம்
வீட்டிலேயே இப்படி நாம் தயார் செய்து குழந்தைகளுக்கு தருவதன் மூலம் வெளியில் இருந்து தேவையற்ற தின்பண்டங்களை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு வரவே வராது. அதனால் உடல் நலமும் சீராக இருக்கும்.