சத்தான சுவையான கோதுமை மாவு இடியாப்பம்

kothumai idiyappam
- Advertisement -

காலை மற்றும் இரவு நேரங்களில் டிபன் செய்வது என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கும். காரணம் அரிசி உளுந்து சேர்த்து மாவு அரைத்து விட்டால் காலையிலும் மாலையிலும் இட்லி, தோசை என்றே செய்வதாக இருக்கும். ஒரு மாற்றத்திற்காக கோதுமை மாவை உபயோகப்படுத்தினால் அதிலும் தோசை, சப்பாத்தி என்று வழக்கம்போல செய்வோம். இதற்கு பதிலாக கோதுமை மாவை வைத்து இடியாப்பம் செய்வது எப்படி என்று தான் சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் இரவு நேரத்தில் அரிசி சம்பந்தப்பட்ட பொருட்களை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்ப்பார்கள். அதிலும் குறிப்பாக கோதுமை மாவால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களையே எடுத்துக் கொள்வார்கள். மேலும் அப்படி செய்யும் பொழுது சப்பாத்தியை சாப்பிட்டால் வயதானவர்களுக்கு ஜீரணம் ஆவது கடினமாக இருக்கும். இந்த அனைத்தையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு எளிமையான ஒன்றுதான் கோதுமை மாவு இடியாப்பம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு – ஒரு கப்
  • தண்ணீர் – ஒரு கப்
  • தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். கடாய் லேசாக சூடானதும் கோதுமை மாவை அதில் சேர்த்து வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். குறைந்த தீயில் வைத்து வறுக்க வேண்டும். பிறகு அதை அப்படியே எடுத்து ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் சேர்த்து விட வேண்டும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி அதில் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

இவை அனைத்தும் நன்றாக கொதித்த பிறகு இந்த தண்ணீரை எடுத்து நாம் வறுத்து வைத்திருக்கும் கோதுமை மாவில் சிறிது சிறிதாக ஊற்றி கரண்டியின் உதவியால் மாவை நன்றாக கிளற வேண்டும். சிறிது சூடு ஆறியதும் கைகளை வைத்து நன்றாக பிணைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கோதுமை மாவை நன்றாக பிணைந்த பிறகு ஐந்து நிமிடம் அதை அப்படியே ஊற வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்பொழுது இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள். இடியாப்ப தட்டி இருந்தால் அதை எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் இட்லி தட்டையை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதில் எண்ணையை நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பிணைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து தேவையான அளவு உருண்டையாக உருட்டி இடியாப்பம் பிழியும் கட்டைக்குள் போட்டு இடியாப்ப தட்டில் பிழிந்து விட வேண்டும்.

இட்லி சட்டியில் தண்ணீர் கொதித்த பிறகு நாம் பிழிந்து வைத்திருக்கும் இடியாப்பத்தை அதற்குள் எடுத்து வைத்து மூடி போட்டு குறைவான தீயில் ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். ஏற்கனவே நாம் வருத்த மாவு மேலும் சுடுதண்ணீரை ஊற்றி பிணைந்ததால் இந்த இடியாப்பம் விரைவிலேயே வெந்துவிடும். ஐந்து நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இடியாப்பத்தை எடுத்து தேங்காய் பூ அல்லது தேங்காய் பால் ஊற்றி பரிமாறலாம். தேங்காய் வேண்டாம் என்று நினைப்பவர்கள் காய்கறிகளை போட்டு குருமா செய்தும் இதற்கு கொடுக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கத்திரிக்காயில் தொக்கு செய்வது எப்படி?

ஒருமுறை இப்படி இடியாப்பம் செய்து கொடுத்து பாருங்கள். வீட்டில் இருக்கும் அனைவரும் இனிமேல் இப்படித்தான் இடியாப்பம் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

- Advertisement -