ரோட்டு கடையில் கொடுக்கும் தண்ணீர் தக்காளி சட்னியின் சுவைக்கு இது தான் காரணமா? தண்ணியா இருந்தாலும் என்ன ஒரு சுவை? இத எப்படி நாமும் செய்யலாம்ன்னு தெரிஞ்சிக்கலாமா?

road-side-tomato-chutney
- Advertisement -

ரோட்டு கடை தண்ணீர் சட்னி என்றாலே எல்லோருக்கும் ரொம்பவும் பிடிக்கும். நாம் என்ன தான் விதவிதமாக சட்னி அரைத்தாலும், ரோட்டோர கடையில் கிடைக்கக் கூடிய தக்காளி சட்னிக்கு ஈடு இணையே கிடையாது. தண்ணீராக இருந்தும் எப்படித்தான் இவ்வளவு சுவையாக இருக்கிறதோ என்று நாம் பலமுறை யோசித்து இருப்போம். அத்தகைய ரோட்டு கடை சுவையான தக்காளி தண்ணீர் சட்னி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

ரோட்டு கடை தண்ணி தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வரமிளகாய் – 10, காஷ்மீரி மிளகாய் – 4, சின்ன வெங்காயம் – 15, பூண்டு பற்கள் – எட்டு, கல் உப்பு – தேவையான அளவு, தக்காளி – 4, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், உளுந்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

ரோட்டு கடை தண்ணி தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
ரோட்டு கடை தண்ணீர் சட்னி செய்ய முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் பத்து வர மிளகாய்களை காம்பு நீக்கி சேருங்கள். நிறம் கொடுப்பதற்கு காஷ்மீரி மிளகாய்களை சேருங்கள். காஷ்மீரி மிளகாய் இல்லையென்றால் பரவாயில்லை விட்டு விடலாம். இதனுடன் 15 சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

சின்ன வெங்காயத்திற்கு பதிலாக ரெண்டு பெரிய வெங்காயத்தையும் பொடி பொடியாக நறுக்கி சேர்க்கலாம். ஏழு எட்டு பூண்டு பற்களை தோலுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் தேவையான அளவு கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் சட்னிக்கு கல் உப்பு சேர்க்கும் போது சுவை அதிகமாக இருக்கும். பின் நான்கு மீடியம் சைஸ் தக்காளி பழங்களை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியை இயக்கி நன்கு நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின் அடுப்பில் ஒரு வாணலியில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து தாளித்து, பின்னர் கால் ஸ்பூன் அளவுக்கு பெருங்காயத் தூளை தூவி தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்சியில் அரைத்த பேஸ்ட்டை இதனுடன் சேர்த்து மிக்ஸி ஜாரையும் கழுவி அந்த தண்ணீரையும் ஊற்றிக் கொள்ளுங்கள்.

பின்னர் நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள். எவ்வளவு கண்சிஸ்டெண்சியில் உங்களுக்கு தேவையோ, அந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் பச்சை வாசம் போக லேசாக கொதித்தால் போதும், நிறைய கொதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஓரளவுக்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் இதை இட்லி, தோசைக்கு பரிமாறி பாருங்கள், அவ்வளவு டேஸ்டாக இருக்கும். பச்சையாக அரைத்து பின்னர் கொதிக்க விடுவதால் இதன் சுவையே வித்தியாசமாக இருக்கும். ரோட்டு கடை சட்னியை பார்த்தால் இனி உங்களுக்கு இந்த சட்னி தான் ஞாபகம் வரப் போகிறது. நீங்களும் இதே மாதிரி வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -