புதிதாக ரோஜா செடி வளர்க்க ஆசைப்படுபவர்களாக இருந்தாலும் சரி அல்லது ரோஜா செடி வாங்கி வைத்து அதில் பூக்களே பூக்கவில்லை அல்லது கம்மியாக பூக்கிறது என்று நினைப்பவர்களும் இந்த வழிமுறைகளை கையாண்டால் பூக்காத ரோஜா செடியும் கொத்து கொத்தாக பூத்து தள்ளும். ரோஜா செடி வளர்ப்பு முறையில் மிக முக்கியமான 2 விஷயங்கள் என்னென்ன? என்பதை தொடர்ந்து இந்த தோட்டக்குறிப்பு பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.
ரோஜா செடி வளர்ப்பு முறையில் மிக முக்கியமான ஒரு விஷயம் உரம் ஆகும். செடிக்கு நாம் கொடுக்கக் கூடிய உரம் மற்றும் மண் கலவை இரண்டுமே மிக முக்கியமானது. புதிதாக ரோஜா செடி வாங்கி வளர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒரு தொட்டியில் முதலில் இதையெல்லாம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
ரோஜா செடிக்கு மண் கலவை மிக முக்கியம் எனவே முதலில் தோட்ட மண் மற்றும் செம்மண் கலவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தொட்டியில் கால் பகுதி அதை நிரப்பிக் கொள்ளுங்கள். வீட்டை சுற்றி இருக்கும் மரம், செடி, கொடிகளின் இலைகளை நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல வீட்டில் சமையலுக்கு உபயோகப்படும் காய்கறி மற்றும் பழ தோல்களையும் வெயிலில் நன்கு உலர்த்தி காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த காய்ந்த இலைகள் மற்றும் தோல்களை அடுத்ததாக கால் பகுதிக்கு சேர்க்க வேண்டும்.
பின் மீண்டும் கொஞ்சம் தோட்ட மண்ணை போட்டு தண்ணீரை தெளித்து விடுங்கள். தொழு உரம் செடி அழுகாமல் பாதுகாக்கும், எனவே மாட்டுச் சாணம் கிடைத்தால் அதை நன்கு காய வைத்து பொடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை அதற்கடுத்ததாக போட்டுக் கொள்ளுங்கள். பின்பு நீங்கள் வாங்கி வந்த ரோஜா செடியை கொஞ்சம் மண்ணுடன் சேர்த்து அப்படியே நட்டு, காய வைத்துள்ள தேங்காய் நார்களை சேர்த்து கடைசியாக தோட்ட மண்னை சேர்த்து மூடிவிட்டு தண்ணீரை ஊற்றுங்கள்.
இந்த கலவையில் இருக்கும் தொட்டியில் நீங்கள் எப்பேர்பட்ட ரோஜா செடியை வைத்தாலும் அது நன்கு பூத்து வளரும். அதே போல உரமாக வாரம் ஒரு முறை பச்சை வாழை பழத்தின் உடைய தோல் மற்றும் டீ தூள் கொண்ட உரத்தை தயார் செய்து போட வேண்டும். பச்சை வாழைப்பழ தோல் பகுதிகளை சேகரித்து துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் டீ போட்டு மீதம் இருக்கும் டீ தூளை சேர்த்து கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்து ஆறியதும் அதை மிக்சர் ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
இளமையான பொலிவான சருமத்தை பெற உதவும் பீட்ரூட்
இந்த உரத்தை ரோஜா செடிக்கு கொடுத்தால், ரெண்டு பூ பூக்கும் இடத்தில் 10 பூ பூக்கும். அந்த அளவிற்கு ரோஜா செடிகளுக்கு நல்ல ஒரு பூஸ்ட் ஆக அமையும். வாரம் ஒரு முறை இதை செய்துவிட்டு மற்ற நாட்களில் நீங்கள் சாதாரணமாக முட்டை ஓடு, காய்கறி பழ கழிவுகள் போன்ற உங்களுக்கு தெரிந்த உரங்களை போட்டு வாருங்கள். நிச்சயம் உங்கள் செடி நல்ல வளர்ச்சியை கண்டு பெரிய பெரிய அடர்த்தியான நிறங்களில் பூக்கக்கூடிய பூக்களையும் கொடுக்கும்.