உங்கள் வீட்டு ரோஜா செடியில் உள்ள மொட்டுகள், பூக்காமலே காய்ந்து விடுகிறதா? மொட்டுக்களில் பூச்சி வைக்கிறதா? இத மட்டும் செஞ்சா பெரிய பெரிய அளவில் அழகான பூ பூக்கும்.

rose

நம்முடைய வீடுகளில் வைத்து பராமரிக்கும் ரோஜா செடிகள், செழிப்பாக வளர்ந்தாலும், நிறைய மொட்டுக்களை வைத்தாலும், அதை பார்க்கும்போது நம்முடைய மனது சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆனால், அந்த மொட்டுக்களானது சில சமயங்களில், முழுமையாக பூப்பதை பார்க்க முடியாமல் போய்விடும். இதற்கு காரணம் வேர்களில் ஊட்டச்சத்து இல்லாததும், மொட்டுகளில் பூச்சிகள் பிடிப்பதும் தான். இந்த இரண்டு பிரச்சினைக்குமே ஒரு சுலபமான தீர்வு உள்ளது. அது என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்கள் வீட்டில் எலுமிச்சைப் பழ தோல்கள், சாத்துக்குடி தோல்கள், ஆரஞ்சு பழத்தோல், இவைகளை தூக்கி வெளியே போடாதீர்கள். அவை அனைத்தையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். 4 எலுமிச்சை பழத்தோல், 1 சாத்துக்குடி பழத்தோல், 1 ஆரஞ்சுப் பழத்தோல், இவைகளுக்கு 2 லிட்டர் அளவு தண்ணீர் போதுமானது.

ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் 2 லிட்டர் தண்ணீரை ஊற்றி, இந்த பழத்தோல் களை எல்லாம் போட்டு, அந்த டப்பாவை ஒரு மூடியை போட்டு மூடிவிட வேண்டும். மூன்று நாட்கள் வரை திறக்க வேண்டாம். மூன்றாவது நாள் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த தண்ணீரை நேரடியாக செடிகளுக்கு ஊற்றி விடக்கூடாது.

ஒரு பக்கெட்டில் ஒரு லிட்டர் அளவு சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஒரு லிட்டர் அளவு பழத் தோல்களை ஊறவைத்த தண்ணீரை, கலக்க வேண்டும். நமக்கு தேவையான ஊட்டச்சத்து உடைய தண்ணீர் தயார். (அதாவது, 1 லிட்டர் ஊட்டச்சத்து தண்ணீரோடு, ஒரு லிட்டர் அளவு நல்ல தண்ணீரையும் கலக்க வேண்டும்.) இந்த தண்ணீரை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொண்டு, உங்களது செடிகளின் மொட்டுப் பகுதிகள், இலை பகுதிகள், தண்டுப் பகுதிகளில் ஸ்பிரே செய்துவிட வேண்டியதுதான். அதன்பின்பு ஒரு கால் கப் தண்ணீரை வேர்ப்பகுதியில் ஊற்றி விட வேண்டும். வேர் பகுதியில் இருக்கும் மண்ணின்மேல் ஊற்றினாலே போதுமானது.

- Advertisement -

செடியில் இருக்கும் பூச்சிகள் முழுமையாக நீங்கும் வரை தொடர்ந்து 7 நாட்கள் இந்த முறையை பின்பற்றலாம். பூச்சிகள் எல்லாம் செடியிலிருந்து சுத்தமாக வெளியேறிவிடும். பின்பு வாரத்திற்கு இரண்டு நாள் மட்டும், இந்த ஊட்டச்சத்து தண்ணீரை ஊற்றினால் போதும். எந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை ஊற்றுவதாக இருந்தாலும், முதலில் செடிகளுக்கு தண்ணீரை பாய்த்து விட்டு, அதன் பின்பு ஊட்டச்சத்து தண்ணீரை ஊற்றுவது தான் முறை.

காய்ந்த பழ தோல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த ஊட்டச்சத்து தண்ணீர் 10 நாள்கள் வரை கெடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இதில் புளிப்பு சுவையானது அதிகமாக இருக்கும். எரிச்சல் தன்மை உடையது. காற்றுப்புகாத பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து, குழந்தைகள் கையில் படாமல் உயரமான இடத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது எடுத்து தண்ணீருடன் கலந்து செடிகளுக்கு ஊற்றிக் கொள்ளலாம்.

rose

உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா செடியாக இருந்தாலும், மல்லி செடியாக இருந்தாலும், மற்ற பூச்செடியாக இருந்தாலும், அளவில் பெரியதாக பூப்பூக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஒரு செடிக்கு மட்டும் முயற்சி செய்து தான் பாருங்களேன்! மொட்டுக்கள் பெரியதாக விரிந்தால் அதில் கிடைக்கும் சந்தோஷமே தனிதான்.