கனவில் சொன்னபடி நிஜத்தில் வீட்டிற்கு வந்த பாபா – உண்மை சம்பவம்

Saibaba
- Advertisement -

ஷீரடி சாயி பாபாவின் சத் சரிதத்தை எழுதியவர் ஹேமத்பந்த். இவருடைய வாழ்க்கையில் பாபா நிகழ்த்திய ஒரு லீலையைப் பார்ப்போம்.
ஒருநாள் இரவு உறங்கிக்கொண்டிருந்த ஹேமத்பந்த்தின் கனவில், நன்றாக உடை அணிந்த ஒரு சந்நியாசியாகத் தோன்றிய பாபா, ஹேமத்பந்த்தை எழுப்பி, அன்று தாம் அவர் வீட்டுக்கு விருந்தாளியாக வரப்போவதாகக் கூறினார்.

saibaba

மிகவும் தெளிவாகத் தெரிந்த கனவுக் காட்சியால் விழித்துக்கொண்ட ஹேமத்பந்த், பாபாவின் ஒவ்வொரு வார்த்தையும் நினைவில் இருக்கும்படி மிகத் தெளிவாக இருந்ததை உணர்ந்தார். பாபா எவர் வீட்டுக்கும் சென்று உணவு கொள்ளமாட்டார் என்பது அவருக்குத் தெரிந்திருந்தாலும், கனவில் தோன்றிய பாபாவின் வார்த்தைகளில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உணர்ந்தார். எனவே அதை உண்மையென்று உறுதியாக ஏற்றுக்கொண்ட ஹேமத்பந்த், தன் மனைவியிடம் அன்று சாயிநாதர் உணவு கொள்ள வருவார் என்று கூறினார். ஷீரடியில் இருக்கும் பாபா எப்படி வெகுதொலைவில் இருக்கும் பாந்த்ராவுக்கு வருவார் என்று சந்தேகப்பட்டாள். தன் சந்தேகத்தை கணவரிடம் வெளிப்படுத்தவும் செய்தாள். ஆனாலும், கணவர் வற்புறுத்திச் சொல்லவே, பாபாவுக்காக மிகச் சிறப்பான முறையில் அறுசுவை உணவு வகைகளைத் தயாரித்து வைத்தாள்.

- Advertisement -

அன்றைய பகலில் பூஜைகள் எல்லாம் முடிந்த பிறகு, குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாபாவின் வருகைக்காகக் காத்திருந்தனர். நீண்டநேரம் சென்றும் பாபா வரவில்லை. வந்திருந்த விருந்தினர்களைக் காக்க வைக்க விரும்பாமல், அனைவரையும் அமரச் செய்து இலைகளில் உணவு வகைகளும் பரிமாறப்பட்டன. அப்போதும்கூட பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை இழக்காத ஹேமத்பந்த், பாபா எந்த விதமாக விருந்துக்கு வரப்போகிறாரோ என்று கவலையும் ஆர்வமும் ஒருசேர எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். உணவுக்கான நேரம் கடந்துவிடும் என்று எல்லோரும் சாப்பிடப்போகும் வேளையில், வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஹேமத்பந்த் உடனே கதவைத் திறந்தார்.

shridi-sai-baba

அங்கே அலிமுஹம்மது, மௌலானா என்ற இரண்டு இஸ்லாமிய அன்பர்கள் நின்றுகொண்டிருந்தனர். உணவு வேளையில் வந்து தொந்தரவு கொடுத்ததற்காகத் தங்களை மன்னிக்கும்படிக் கேட்டுக்கொண்ட அவர்கள், காகிதத்தால் சுருட்டப்பட்ட ஒரு சுருளை ஹேமத்பந்த்திடம் கொடுத்துவிட்டு, ”உங்களுக்காகக் கொண்டு வந்த இதைப் பெற்றுக்கொள்ளுங்கள். பிறகு உங்களைச் சந்தித்து அதைப் பற்றிய அதிசயமான நிகழ்ச்சியை கூறுகிறோம்” என்று சொல்லிச் சென்றனர்.

- Advertisement -

வந்தவர்கள் சென்றவுடன், ஹேமத்பந்த் காகிதச் சுருளைப் பிரித்துப் பார்த்தார். அது சாயிபாபாவின் அழகிய படம்! கனவில் கூறியதுபோலவே  உணவு கொள்ளும் சரியான நேரத்தில் பாபா விருந்தாளியாக வந்து விட்டார்! ‘சித்திரத்திலும் உயிருடன் இருப்பதாக’ அருளிய மகான் அல்லவா சாயிநாதர்?! ஹேமத்பந்தின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் உணவுக் கூடத்துக்குச் சென்றவர், முக்கிய விருந்தாளிக்காகப் போடப்பட்டிருந்த நடுநாயகமான இருக்கையில் பாபாவின் படத்தை வைத்தார். அதை முறையாகப் பூஜித்து நைவேத்தியம் அளித்தபின், குடும்பம் முழுவதும் உணவு கொண்டது.

Sai baba

இந்தச் சம்பவம் நடைபெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அலிமுஹம்மது மூலம் சாயிபாபா சித்திரத்தின் வடிவத்தில் தன் வீட்டுக்கு வந்த விதம் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.

- Advertisement -

பக்தி மனப்பான்மை கொண்ட அலி முஹம்மது, பாந்த்ராவிலுள்ள தனது வீட்டில் தாஜுத்தீன் பாபா, மௌலானா ஸாஹேப், முஹம்மது ஹுஸேன், சாயிபாபா போன்ற பெரும் மஹான்களின் படங்களை வைத்திருந்தார். ஒரு முறை, அவரது மைத்துனரான நூர் முஹம்மது பீர்பாய் என்பவர், தனது குருவான அப்துல் ரஹ்மான் என்ற மஹானின் படத்தின் பிரதிகளைத் தன் எல்லா நண்பர்களுக்கும் கொடுத்தபோது, ஒரு பிரதியை அலி முஹம்மதுவுக்கும் கொடுத்தார். அவர் அந்தப் படத்தைத் தன் வீட்டிலுள்ள மற்ற படங்களோடு வைந்திருந்தார்.

Sai baba

அலி முஹம்மது ஹேமத் பந்தின் வீட்டிற்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, தம் காலில் ஏற்பட்ட கட்டி ஒன்றிற்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு, பம்பாயிலுள்ள நூர் முஹம்மதின் வீட்டில் படுத்திருந்தார். அப்போது நூர்முஹம்மது வீட்டுக்கு வந்த மஹான் அப்துல்ரஹ்மான், தம்முடைய உருவப்படத்தை நூர்முஹம்மது வழிபடுவது கண்டு சினம் கொண்டார். விக்கிரஹ ஆராதனை கூடாது என்று உபதேசிக்கும் நூர்முஹம்மது, தம்முடைய உருவப் படத்தை வழிபடுவதற்குச் சம்மதிக்கவில்லை. தான் அன்புடனும் பக்தியுடனும் செய்த செயல் தன்னுடைய குருநாதருக்குப் பிடிக்கவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த நூர்முஹம்மது, உடனே தன்னுடைய நண்பர்களுக்கு அளித்திருந்த குருவின் படங்களை திரும்பப் பெற்று, ஒரு மீனவரைக் கொண்டு கடலில் எறிந்துவிடச் செய்தார்.

baba

அலிமுஹம்மதுவிடமும் தான் அவருக்குக் கொடுத்திருந்த அப்துல்ரஹ்மானின் படத்தை கடலில் எறிந்துவிடுமாறு கேட்டுக்கொண்டார். அவரும் தன் மேனேஜரிடம் வீட்டில் உள்ள எல்லா படங்களையும் கடலில் எறிந்துவிடும்படிக் கூறினார். சிகிச்சை முடிந்து பாந்த்ராவுக்குத் திரும்பிய அலிமுஹம்மது, வீட்டில் சாயிபாபாவின் படம் மட்டும் இருப்பதைப் பார்த்து திகைத்துவிட்டார்.

இதையும் படிக்கலாமே:
பக்தனுக்காக ஓடோடிப்போன சாய்பாபா – உண்மை சம்பவம்

தான் எல்லா படங்களையும் கடலில் எறிந்துவிடும்படி சொல்லியிருக்க, பாபாவின் படம் மட்டும் எப்படி அப்படியே இருக்கிறது என்று குழம்பிவிட்டார். அதைக் கடலில் எறிய அவருக்கு மனம் வரவில்லை. அதேநேரம் அந்தப் படத்தைத் தன் மைத்துனர் நூர்முஹம்மது பார்த்தால் தூக்கி எறிந்துவிடுவார் என்று பயந்து, அந்தப் படத்தை பாதுகாப்பாக பீரோவில் வைத்தார். பாபாவின் படத்தை எப்படியும் காப்பாற்றவேண்டும் என்று அவர் விரும்பினார். தன்னுடைய நண்பர் ஒருவரின் ஆலோசனையைக் கேட்டார். அந்த நண்பருக்கு ஹேமத்பந்த்தைப் பற்றியும், பாபாவிடம் அவர் கொண்டிருந்த பக்தியைப் பற்றியும் தெரிந்திருந்தது. எனவே பாபாவின் பக்தரான ஹேமத்பந்த் பாபாவின் படத்தை போற்றிப் பாதுகாப்பார் என்று கூறினார். அதன்படியே அலிமுஹம்மது ஹேமத்பந்த் வீட்டுக்கு வந்து சாயிநாதரின் திருவுருவ வண்ணப்படத்தைக் கொடுத்துச் சென்றார்.

இது போன்ற மேலும் பல சாய் பாபா கதைங்கள், ஜோதிடம் சார்ந்த தகவல்களை படிக்க தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -