இந்த பொங்கலுக்கு உங்க வீட்டில சர்க்கரைப் பொங்கலை இப்படி செஞ்சு பாருங்க! ருசியும் மணமும் சுவையும் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும்.

pongal

தைப்பொங்கலுக்கு எல்லோருடைய வீட்டிலும் காலையில் சர்க்கரைப் பொங்கலை செய்யும் வழக்கம் கட்டாயமாக இருக்கும். உங்களுடைய வீட்டில் இந்த தைப்பொங்கல் அன்று, இந்த முறைப்படி சர்க்கரை பொங்கலை வைத்து பாருங்கள். சில பேருக்கு இந்த சர்க்கரை பொங்கலை பக்குவமாக செய்ய தெரியாது. இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் அளவுகளை பயன்படுத்தி, முறையாக செய்யும் பட்சத்தில் உங்கள் வீட்டு சர்க்கரை பொங்கல், கோவிலில் கொடுக்கும் சர்க்கரை பொங்கலை போல ருசியாக இருக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. சூரிய பகவானுக்கு சுவையான சர்க்கரைப் பொங்கல் எப்படி செய்வது? தெரிஞ்சுக்கலாம் வாங்க.

சர்க்கரைப் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 200 கிராம் 1 கப், பாசிப் பருப்பு – 50 கிராம் 1/4 கப், வெல்லம் 150 கிராம், காய்ச்சாத பால் – 1/4 டம்ளர், 5 கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். பச்சரிசியை அளந்த கப்பில் தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். நெய் – 4 டேபிள்ஸ்பூன், முந்திரி பருப்பு, உலர் திராட்சை தேவையான அளவு. (கடையில் வெல்லம் வாங்கும்போது, பாகு வெல்லம் என்று கேட்டு வாங்குங்கள்.)

முதலில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் ஒன்றாக போட்டு நான்கு முறை அலசி கழுவி கொள்ள வேண்டும். பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் நன்றாக கழுவவில்லை என்றால் பாசிப் பருப்பின் பச்சை வாடை சர்க்கரைப் பொங்கலில் வீசும். சுத்தமாக கழுவ வேண்டியது அவசியம். கழுவிய பச்சரிசியையும் பாசிப்பருப்பையும், நல்ல தண்ணீரை ஊற்றி, 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

pasiparupu

அதன்பின்பு நீங்கள் மண்பானையில் பொங்கல் வைத்தாலும் சரி, அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் உங்களுடைய வீட்டில் பொங்கல் வைத்தாலும் சரி, அதில் பச்சரிசியை போட்டுவிட்டு அதன் பின்பு தண்ணீரை ஊற்றி, அடுப்பின் மேல் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவேண்டும். குக்கரில் மட்டும் பொங்கல் செய்ய வேண்டாம். குக்கரில் பொங்கல் வைத்தால் அதன் சுவை குறைவாகத்தான் இருக்கும்.

- Advertisement -

தயாராக இருக்கும் பொங்கல் பானையை சிறிது நேரம் மூடி வைத்து விடலாம். பொங்கல் நன்றாக கொதி வந்த உடன், இடை இடையே கரண்டியை விட்டுக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் பொங்கல் அடி பிடிக்க வாய்ப்பு உள்ளது. பொங்கல் முக்கால் பாகம் வெந்து தயாராகும்போது, 1/4 டம்ளர் அளவு காய்ச்சாத பசும் பாலை ஊற்றி கொதிக்க விடுங்கள். அரிசி குழைந்த பின்பு தான், இறுதியாக வெல்லத்தை பொடி செய்து சேர்க்கவேண்டும். வெல்லத்தை சேர்த்து பின்பு இறுதியாக ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

pongal2

அரிசியை முழுமையாக வெந்து தண்ணீர் எல்லாம் வற்றிய பின்புதான் வெல்லத்தை சேர்த்து, கிளற வேண்டும். வெல்லம் சேர்த்த பின்பு அரிசி வேகாது. அடுப்பை சிம்மில் வைத்து விட்டு வெல்லத்தின் பச்சை வாடை போகும் அளவிற்கு பொங்கலை கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். வெல்லத்தின் பச்சை வாடை முழுமையாக நீங்கி, கெட்டிப் பிடித்தால் தான் சர்க்கரைப் பொங்கலுக்கு சுவை அதிகரிக்கும்.

pongal3

இறுதியாக ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் நெய், முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்து சர்க்கரை பொங்கலுடன் சேர்த்து கிளறி பரிமாறினால் சுவையான சூப்பரான சர்க்கரைப்பொங்கல் தயாராகியிருக்கும். பொங்கல் தயாரான பின்பு, சூடாக இருக்கும்போது பொங்கலின் மேல் தட்டை போட்டு மூடி விடக்கூடாது. அதை நன்றாக ஆறிய பின்பு தான் மூடிவைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்தப் பொங்கலுக்கு உங்க வீட்டில இந்த சர்க்கரை பொங்கலை செய்து அசத்துங்க. அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே
நாளை போகி அன்று, இந்த வழிபாட்டை செய்ய மறக்காதீர்கள். குலதெய்வ குற்றமாகிவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.