பெண்களும், ஆண்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சாணக்கிய நீதி

Chanakya

நாம் இப்படித்தான் வாழ வேண்டும். இப்படியெல்லாம் வாழக்கூடாது. என்ற விதிமுறைகளை நம் முன்னோர்கள்  நமக்கு கூறி விட்டு தான் சென்றிருக்கின்றார்கள். அப்படிப்பட்ட நம் முன்னோர்களின் கூற்று பொய்யாகாது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும் என்று நமக்கு கூறிவிட்டு சென்றவர் தான் சாணக்கியர். சாணக்கியர் கொடுத்த பொன்மொழிகளை நாம் அவசியம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்ளும் கணவன் மனைவி, துரோகம் செய்யும் நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் இவர்களுடன் வாழ்வது விஷப்பாம்புடன் வாழ்வதற்கு சமம். இது ஒரு நாள் நமக்கு நிச்சயம் மரணத்தை தேடித்தரும்.

ஒருவனுக்கு பண வரவு இருக்கும் போதே அதை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். கஷ்ட காலத்தில் அந்தப் பணம் அவனுக்கு உதவும்.

கஷ்டம் வரும்போது நம் உறவுகளைப் பற்றியும், வேலை செய்யும் போது நம் வேலைக்காரனை பற்றியும், ஆபத்து வரும் போது நண்பனை பற்றியும், கணவன் நோய்வாய்ப்படும் போது மனைவியைப் பற்றியும், மனைவி நோய்வாய்ப்படும் போது கணவனை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

Chanakya

- Advertisement -

ஆயுதம் ஏந்திய மனிதன், ஆபத்தை ஏற்படுத்தும் விலங்கு, ஓடும் ஆறு, அரச குடும்பத்தில் பிறந்தவர்கள், இவைகளை ஒரு நாளும் நம்பக்கூடாது.

அறிவாளிகளாக இருந்தால், ஒரு காரியத்தில் வெற்றி பெறுவதற்கு முன்பு அந்த செயலைப் பற்றி வெளியே கூற மாட்டார்கள்.

நல்ல தந்தையானவன் தன் குழந்தைகள், எவரையும் சார்ந்திருக்காமல், தனித்து, தன்னை பாதுகாத்துக் கொள்ள தேவையான வித்தைகளை கற்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தருவான்.

Chanakya

ஒரு நாள் பொழுதை கூட நாம் உபயோகமில்லாமல் கழிக்கக்கூடாது. ஒரு வார்த்தையைக் கூட படிக்காமல், ஒரு சொல்லைக் கூட கற்காமல், ஒரு நல்ல செயலை கூட செய்யாமல் இருக்க கூடாது.

ஒரு நல்ல செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், அவன் கல்வி கற்காமல் விட்டுவிட்டால் அவனின் செல்வ செழிப்பை பாதுகாக்க முடியாது.

உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்ச வேண்டும். 5 முதல் 15 வயது வரை தப்பு செய்தால் தண்டிக்க வேண்டும். 15 வயதுக்கு மேல் நண்பனாக இருக்க வேண்டும்.

நம்முடன் இருக்கும் எல்லா செல்வங்களும் நம்மை விட்டு ஒரு நாள் சென்று விடலாம். ஆனால் கல்விச் செல்வம் என்பது கடைசி வரைக்கும் நம்மை காக்கும். ஆகையால் ஒரு நாளும் கற்காமல் இருந்துவிடாதீர்கள்.

பகலில் எரியும் தீபத்தினால் பயனில்லை, கடலில் விழும் மழைத்துளியில் பயனில்லை, நோயுள்ளவர்களுக்கு அறுசுவை விருந்து அளிப்பது பயனில்லை, வசதி உடையவர்களுக்கு பரிசளிப்பது பயனில்லை, அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரைக்கும் பயனில்லை.

Chanakya

காமத்தை விட கொடிய நோய் வேறு எதுவுமில்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை.

பணம் உள்ளவன் இந்த உலகத்தில் எது செய்தாலும் அது சரிதான். அவனைத் தான் இந்த உலகம் மதிக்கின்றது. நண்பர்களும், உறவினர்களும் அவனைத்தேடி செல்வார்கள். அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று போற்றுகின்றது.

பிறவி குருடனுக்கு கண் தெரியாது, பெருமை பேசுபவனுக்கு கெட்டது தெரியாது. பணம் மட்டும் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவனுக்கு பாவம் தெரியாது.

பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போட்டும், முட்டாளிடம் நகைச்சுவையாக பேசியும், அறிவாளியிடம் உண்மையான வார்த்தையை பேசி அணுகலாம்.

ஒருவன் தனக்கு கிடைத்த வாழ்க்கை, மனைவி, பணம், சொத்துக்கள் இவற்றில் திருப்தி அடைய வேண்டும். கல்வி கற்பதிலும், தானம் தர்மம் செய்வதிலும் ஒரு நாளும் திருப்தி அடையக்கூடாது. அதனை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

யானையிடம் இருந்து 1000 அடி தள்ளி இருக்கலாம். குதிரையிடம் இருந்து 100 அடி தள்ளி இருக்கலாம். பாம்பைப் பார்த்தால் 10 அடி தள்ளி ஓடி விடலாம், உனக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் மக்கள், உன் ஊரில் இருந்தால் அந்த ஊரை விட்டு நீ ஓடிவிடு.

ஊரோடு ஒத்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்கள். காட்டில் நேராக வளர்ந்து நிற்கும் மரத்தை தான் முதலில் வெட்டுவார்கள். வளைந்து நெளிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

பறவைகள் தண்ணீர் இருக்கும் வரைதான் அந்த இடத்தில் வசிக்கும். தண்ணீர் தீர்ந்ததும் வேறொரு இடத்திற்கு சென்று விடும். அது போலத்தான் மனிதர்களும். உங்களிடம் ஆதாயம் இருந்தால் தான் அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

சிங்கத்தின் குகைக்குள் சென்றால் மான் கொம்புகள் கிடைக்கும். நரியின் குகைக்குள் சென்றால் எலும்புத் துண்டுகள், மாட்டின் வால் கிடைக்கும். இவ்வாறு நாம் ஒரு செயலில் இறங்கினால் நமக்கு என்ன கிடைக்கும் என்பதை யோசித்து அந்த செயலில் இறங்குவது நல்லது.

இவை அனைத்தும் சாணக்கியரால் சொல்லப்பட்டு, நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய உண்மை கூற்றுகள்.

இதையும் படிக்கலாமே
விநாயகர் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sanakiyan quotes in Tamil. Sanakiyan thathuvam in Tamil. Sanakiyan neethi in Tamil. Chanakya neeti Tamil. Chanakya quotes in Tamil.